தமிழக மீனவர்களை காக்க உரிய சட்டம் வேண்டும்- தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தல்

இலங்கை கடற்படை தாக்குதலில் இருந்து தமிழக மீனவர்களை காக்கும் வகையில் உரிய சட்ட பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மக்களவையில் திமுக தமிழச்சி தங்கபண்டியன் வலியுறுத்தினார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று…

இலங்கை கடற்படை தாக்குதலில் இருந்து தமிழக மீனவர்களை காக்கும் வகையில் உரிய சட்ட பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மக்களவையில் திமுக தமிழச்சி தங்கபண்டியன் வலியுறுத்தினார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று மக்களவையில் ‘கடல் கொள்ளை தடுப்பு மசோதா- 2019″ மீது விவாதம் நடைபெற்றது. மசோதா குறித்து பேசிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், “இந்திய கடல் பகுதி மட்டுமல்லாமல், சர்வதேச கடல் பகுதியிலும் கப்பல்கள், விமானங்கள் மீது கொள்ளைத் தாக்குதலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்த மசோதா உதவும் என குறிப்பிட்டார்.

மேலும், கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இந்த மசோதா அமல்படுத்தப்பட்ட போது, விரிவான ஆலோசனைக்குழு நாடாளுமன்ற தேர்வுக் குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. குழு வழங்கிய 18 பரிந்துரைகளில் 14 பரிந்துரைகள் திருத்தப்பட்ட மசோதா வரைவில் இடம்பெற்றுள்ளன” எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ், திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் மசோதா மீதான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.

அப்போது கடல்சார் கொள்ளை தடுப்பு மசோதாவை வரவேற்றுப் பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியன், “தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தொடந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இதுவரை 600 மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரத்துக்கு மேற்பட்ட படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனை தடுக்க கடுமையான சட்டம் எதுவும் இல்லை. பேச்சுவார்த்தை நடத்துவதை தவிர வேறு வழி இல்லாமல் உள்ளது.

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்க உரிய சட்ட பாதுகாப்பு அளிக்க வேண்டும். கடற்கொள்ளை தடுப்பு மசோதாவின் கீழ் அமைக்கப்படவுள்ள கொள்ளை தடுப்பு நீதிமன்றங்களின் கிளையை தமிழகத்திலும் அமைக்க வேண்டும்” என்று அவர் பேசினார்.

மத்திய அரசாங்கத்தால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து உதாசீனப்படுத்தப் படுவதாக பேசிய தமிழச்சி தங்கபாண்டியன், “கச்சத்தீவு விவகாரத்திலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும், அதனை மீட்க
தேவைப்பட்டால் சர்வதேச நீதிமன்றத்தை மத்திய அரசு நாட வேண்டும்” என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் கோரிக்கை வைத்தார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.