சனாதனம் குறித்து நான் பேசியதில் தவறில்லை, பிறகு ஏன் அமைச்சர் சேகர் பாபு பதவி விலக வேண்டும் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
செப்டம்பர் 2ம் தேதி தமுஎகச சார்பில் சென்னையில் “சனாதன ஒழிப்பு மாநாடு’ நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் “ இந்த மாநாட்டிற்கு சனாதன எதிர்ப்பு மாநாடு என்று பெயர் வைக்கவில்லை. சனாதன ஒழிப்பு மாநாடு என மிகச் சரியாக வைத்துள்ளீர்கள். சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதுதான் சிறந்தது. எப்படி டெங்கு, மலேரியா மற்றும் கோவிட் போன்றவற்றையும் ஒழித்துள்ளோமோ அதே போல சாதி மற்றும் ஏற்றத் தாழ்வுககளை ஊக்குவிக்கும் சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும்” என பேசியிருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, அந்த மாநாட்டில் பங்கேற்ற தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பதவி விலக வேண்டும் என தனது X பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டார் .
அந்த பதிவில், சனாதன ஒழிப்பு குறித்த கூட்டத்தில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசிய போது, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக உள்ள சேகர்பாபு அமைதி காத்துள்ளார். இதன்மூலம், இந்து சமய அறநிலையத்துறைக்கு அமைச்சராக தொடரும் தார்மீக உரிமையை சேகர்பாபு இழந்து விட்டர். வரும் 10-ம் தேதிக்குள் அவர் பதவி விலக வேண்டும், அப்படி சேகர்பாபு பதவி விலகவில்லை என்றால், வரும் 11-ம் தேதி போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அண்ணாமலை குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
தூத்துக்குடியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
சனாதனம் குறித்து நான் பேசியதில் தவறில்லை. நான் பேசியதில் தவறு இல்லாத போது அமைச்சர் எதற்கு ராஜினாமா செய்ய வேண்டும். சனாதனத்தில் பெண்கள் அடிமையாக வைக்கப்பட்டிருந்தார்கள். சனாதனத்தில் கணவன் இறந்தால் உடன்கட்டை ஏற வேண்டும். வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தது. திராவிட மாடலில் அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது
காலை உணவு திட்டம், பெண்களுக்கான புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை திராவிட மாடல் ஆட்சி கொண்டு வந்துள்ளது. இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.