தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் பரவல் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில்
இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்து நலம் பெற்றவரை அமைச்சர் மா சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார், பின்னர் வெற்றிகரமாக சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர் கூறியதாவது:
வெளிநாட்டில் பணியாற்றி வந்த புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 27 வயது
அஜித்குமார் என்கிற இளைஞருக்கு, சாலை விபத்தில் படுகாயமடைந்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மூளை சாவு அடைந்த 57 வயதுடைய ஒருவரின் இதயம் பொருத்தப்பட்டுள்ளது, கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் இன்று நலமுடன் அவர் வீடு திரும்புகிறார்.
ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 11 இதய மாற்று அறுவை சிகிச்சை
செய்யப்பட்டுள்ளது.ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 2000 புறநோயாளிகள் வரும் நிலையில் அதில் 500க்கும் மேற்பட்ட புற நோயாளிகள் இதயம் தொடர்பான பிரச்சனைகளுக்கு சிகிச்சைக்கு வருகின்றனர்.
இந்தியாவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் உறுப்பு தானத்தில்
தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. இந்த ஆண்டு மட்டும் ஆகஸ்ட் மாதத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மூளை சாவில் உயிரிழந்த 106 நபர்களிடம் இருந்து உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளது. இதுவரை 624 உறுப்புகள்
பொருத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இதுவரை 13 அரசு மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய அனுமதி வழங்கப்பட்டு சிகிச்சைகள் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது மேலும் 28 மருத்துவமனைகளுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மேலும் 41 மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படும் என கூறினார்.
பன்றி காய்ச்சல் பரவல் தமிழ்நாட்டில் அதிகரிக்கவில்லை.மருத்துவமனைகளில் பரிசோதனைகள் தொடங்கப்பட்டுள்ளது. பன்றி காய்ச்சல் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. மருத்துவமனைகளில் மாவட்ட வருவாய் அலுவலர்கள் ஆய்வு செய்வதற்கு மருத்துவர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மாவட்ட ஆட்சித் தலைவர் மட்டுமே ஆய்வு செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். இது நிர்வாக பிரச்சனை இது குறித்து பேசி தீர்வு காணப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.







