“வங்கக்கடலில் ரூபாய் 80 கோடி செலவில் மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின்
நினைவாக பேனா நினைவு சின்னம் அமைப்பதில் தவறு ஏதுமில்லை. கருணாநிதிக்கு
நினைவுச்சின்னம் வைக்கக்கூடாது என்பது பொறாமையில் சிலர் சொல்லும் கருத்துகள்,
இதை பொருட்படுத்த வேண்டாம்” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்
கே.எஸ். அழகிரி கூறினார்.
இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது அமலாக்கத் துறையை ஏவிவிட்டு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடும் மோடி அரசைக் கண்டித்து இன்று சிதம்பரம் காந்தி சிலை அருகில் கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாபெரும் அறவழிப் போராட்டம் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டார்.
பின்னர் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதைத் தொடர்ந்து அவர் பேசியதாவது:
சோனியா மீது மோடி அரசின் அமலாக்கத் துறை விசாரணை அமைத்துள்ளது.
இது ஜனநாயக ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் தவறானது. வேண்டுமென்றே நாங்கள்
இப்படித்தான் செய்வோம்; எங்கள் ஆட்சி முறை இதுதான் என்ற வன்முறையாளர்கள்
கையில் இந்த ஆட்சி சென்றுள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறேன்.

வங்கக் கடலில் ரூபாய் 80 கோடி செலவில் மறைந்த முதலமைச்சர் கருணாநிதி நினைவாக
பேனா நினைவுச்சின்னம் அமைப்பதில் தவறு ஏதுமில்லை. 3 ஆயிரம் கோடி ரூபாய்
செலவில் பட்டேலுக்கு சிலை வைத்தபோது தவறு என்று யாரும் கூறவில்லை. பிரதமர்
மோடிக்கு ரூபாய் 500 கோடி செலவில் விமானம் வாங்குகிறார்கள். ஒரு சிலர்
வேண்டுமென்றே பொறாமையில் கருணாநிதிக்கு நினைவுச் சின்னம் வைக்கக் கூடாது
என்பதற்காக சொல்லும் கருத்துகளைப் பொருட்படுத்த வேண்டாம். தமிழ்நாடு காங்கிரஸ்
கட்சி, கலைஞருக்கு நினைவுச்சின்னம் அமைப்பதை வரவேற்கிறது என்றார் அழகிரி.







