” தி கேரளா ஸ்டோரி படத்தில் உண்மை இல்லை “ – மநீம தலைவர் கமல்ஹாசன் பேட்டி

” தி கேரளா ஸ்டோரி படத்தில் உண்மை இல்லை ” என நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான  கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சுதிப்தோ சென் இயக்கி, விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில், அதா ஷர்மா,…

” தி கேரளா ஸ்டோரி படத்தில் உண்மை இல்லை ” என நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான  கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சுதிப்தோ சென் இயக்கி, விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில், அதா ஷர்மா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி மற்றும் சித்தி இத்னானி ஆகியோர் நடித்த ‘தி கேரளா ஸ்டோரி’ சமீபத்தில் வெளியானது பெரும் சர்ச்சைக்குள்ளானது. தென் மாநிலத்தில் காணாமல் போனதாகக் கூறப்படும் “சுமார் 32,000 பெண்களின்” பின்னணியில் உள்ள நிகழ்வுகளை “கண்டுபிடிப்பதாக” இப்படம் சித்தரிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் அனைவரும் மதம் மாறி பின்னர் தீவிரவாதிகளாக மாறியதாகவும், இந்தியாவிலும் உலகிலும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் படம் தவறான செய்தியை சித்தரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கேரளாவில் இப்படத்திற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

மேலும் போராட்டங்களுக்கு இடையே, படத்தின் வெளியீட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட மறுத்துவிட்டது.

நீதிமன்றங்கள், விசாரணை அமைப்புகள் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் கூட நிராகரித்த ‘லவ் ஜிகாத்’ பிரச்னையை எழுப்புவதன் மூலம் மாநிலத்தை மத தீவிரவாதத்தின் மையமாக சித்தரிக்கும் சங்பரிவார் அமைப்புகள் பிரசாரத்தை கையிலெடுத்துள்ளது என, ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் தயாரிப்பாளர்களை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடுமையாக சாடினார் .

”தமிழ்நாட்டில் “தி கேரளா ஸ்டோரி” திரைப்படத்தை அரசு தடை செய்யவில்லை. மாநிலம் முழுவதும் மொத்தமாக 19 திரையரங்குகளில் படம் வெளியிடப்பட்டது. மேலும் திரைப்படம் வெளியான திரையரங்குகளுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

ஆனால், மக்களிடம் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் திரையரங்க உரிமையாளர்களே படத்தை திரையிடவில்லை. வரவேற்பு இல்லை என்பதால் திரையரங்குகளில் படத்தை நீக்கி விட்டு வேறு படத்தை திரையிடுகிறார்கள். அதனால் இந்த விவகாரத்தில் தமிழக அரசின் தலையீடு எந்த இடத்திலும் கிடையாது” என  உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்தது.

இந்த நிலையில் அபுதாபியில் செய்தியாளர்களை சந்தித்த நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்ததாவது..

“நான் பிரச்சாரப் படங்களுக்கு எதிரானவன் என ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். ‘உண்மைக் கதை’ என லோகோவாக கீழே எழுதினால் மட்டும் போதாது, அது உண்மையாக இருக்க வேண்டும். தி கேரளா ஸ்டோரி படத்தில் உண்மை இல்லை.

தென் இந்திய திரைக் கலைஞர்கள் அதிகளவில் அரசியல் நிலைப்பாடுகளை எடுப்பது தவறில்லை. நமது நாடு மிகவும் முக்கியமானது. நமது நாட்டில் அமைதியை ஏற்படுத்த கலைகளை பயன்படுத்த வேண்டும். 60-70 வருடங்களுக்கு முன்னர் ஐரோப்பிய கலைஞர்கள் செய்த அதே தவறை நாம் செய்யக் கூடாது. ஜெர்மனிக்கு எதிராக அவர்கள் அமைதி காத்தனர்.” என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.