தமிழ்நாட்டில் போதுமான அளவில் யூரியா உரம் கையிருப்பில் உள்ளதாக கூட்டுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தேசி விவர்ஸ் (Desi weavers) என்கிற பெயரில் ஆட்டிசம் குறைபாடு உள்ள நபர்களால் தயார் செய்யப்பட்ட கைவினை பொருட்களான தலையணைகள், யோகா விரிப்புகள், மடிக்கணினி பைகள், மணி பர்சுகள், ஹேண்ட் பேக்குகள் ஆகிய 20 பொருள்கள் தயார் செய்யப்பட்டு விற்பனைக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி கிருத்திகா ராதா கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பொருட்களை அறிமுகம் செய்து வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத்துறை செயலாளர், திருவல்லிக்கேணியில் உள்ள கூட்டுறவுத்துறை சார்பில் செயல்படும் விற்பனை அங்காடியில் சுய உதவிக் குழுக்களுக்கு கடைகள் ஒதுக்கப்பட்டது போல ஆட்டிசம் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கும் ஒரு தனி கடை ஒதுக்கப்படும் என தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் மொத்தமாக 2.18 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளதாகவும், 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நியாய விலைக் கடைகள் தமிழகத்தில் செயல்பட்டு வருவதாகவும், இதில் தற்போது ரேஷன் அரிசி கடத்தல் தமிழ்நாட்டில் அதிகமாகி வருகிறது. தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தனிப்படை அமைக்க டிஜிபிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என தெரிவித்தார்.
மேலும் 7.5.2022 வரை 10,859 ரேஷன் அரிசி கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் பெரிய அளவில் அரிசி கடத்தல் செய்த 108 நபர்களை கைது செய்துள்ளோம். கடந்த வாரத்தில் ஒரு மணி நேரம் ஸ்மார்ட் கார்டுகள் மூலம் நியாய விலைக் கடைகளில் பொருட்கள் வாங்குவதில் பிரச்சனை ஏற்பட்டதாகவும், 97 விழுக்காடு பரிமாற்றங்கள் ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் மூலம் தான் நடைபெறுகிறது. இதனால் அதனை சரி செய்ய துரிதமான நடவடிக்கையை எடுத்து இனிமேல் நடக்காத வண்ணம் செயல்படுவதாகவும் தெரிவித்தார்.
இந்த ஆண்டு முன்கூட்டியே காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டதன் காரணமாகவும் விவசாயிகள் அதிக அளவில் உரம் வாங்க முற்படுகின்றனர். அதற்கேற்றார் போல் கூட்டுறவு துறையிலும் உரங்கள் போதுமான அளவு கையிருப்பு உள்ளது. தற்போது வரையில் யூரியா தட்டுப்பாடு தமிழகத்தில் இல்லை என கூறினார்.
40,000 ஆயிரம் கோடி நகை கடன் கூட்டுறவுத்துறை சார்பில் வழங்கப்படுகிறது. அதில் 5 சவரனுக்கு கீழ் நகை கடன் பெற்றவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்வது அரசின் கொள்கை முடிவு. அதில் சிலர் கடன் தள்ளுபடி ஆகவில்லை என தெரிவிக்கின்றனர் அது குறித்து தற்போது ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.







