ஆரம்ப சுகாதார நிலையத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்த அரசு ஆவண செய்யுமா என எம்.எல்.ஏ. சி.மகேந்திரன் அமைச்சர் மா.சுப்பிரமணியன்-இடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மூர்த்தி, சிவசங்கர், சேகர்பாபு, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், நாசர், செஞ்சி மஸ்தான், அன்பில் மகேஸ் பெய்யாமொழி, மெய்யநாதன், கணேசன், மனோ தங்கராஜ், மதிவேந்தன், கயல்விழி உள்ளிட்டோர் பதிலளித்துப் பேசுகின்றனர்.
அதில் மடத்துக்குளம் தொகுதி எரிசினம் பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்த அரசு ஆவண செய்யுமா என்று எம்.எல்.ஏ. சி.மகேந்திரன் கேள்வி எழுப்பினார். இதற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் கூறினார். அதில், “எரிசினம்பட்டியில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. அங்கிருந்து 17 கி.மீ,. தொலைவில் உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனை அனைத்து வசதிகளுடனும் செயல்பட்டு வருவதால் எரிசினம்பட்டி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை” எனத் தெரிவித்தார். இருப்பினும் மக்கள் தொகையைக் கணக்கிட்டு மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று தரம் உயர்த்துவது பற்றி முடிவெடுக்கப்படும் என்று கூறினார்.







