2003 உலக கோப்பை பைனலை மறக்க முடியுமா?

23 மார்ச் 2003 அன்றைய தேதியை இந்தியாவில் உள்ள 90s கிட்ஸ்களால் எளிதில் மறந்து விட முடியாது. ஆம், அன்றுதான் உலககோப்பை கிரிக்கெட்டின் இறுதிப்போட்டி. இரண்டு முறை உலககோப்பையை கைப்பற்றி விட்டு மூன்றாவது முறை…

23 மார்ச் 2003 அன்றைய தேதியை இந்தியாவில் உள்ள 90s கிட்ஸ்களால் எளிதில் மறந்து விட முடியாது. ஆம், அன்றுதான் உலககோப்பை கிரிக்கெட்டின் இறுதிப்போட்டி. இரண்டு முறை உலககோப்பையை கைப்பற்றி விட்டு மூன்றாவது முறை வெல்லத் துடிக்கும் ஜாம்பவான்களை உள்ளடக்கிய ஆஸ்திரேலியா அணி ஒரு பக்கம்…..சத்தமின்றி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய கங்குலி தலைமையிலான இந்திய அணி இன்னொரு பக்கம்.

தென் ஆப்ரிக்கா ஜோனஸ்பர்க்ககில் ஞாயிற்றுக்கிழமை மதியம் போட்டி தொடங்குகிறது. சுட்டெறிக்கும் வெயிலில் இந்திய அணி பந்து வீசுகிறது. உலகின் தலைசிறந்த அம்பயர்களான டேவிட் ஷேப்பேடும், பக்னரும்தான் போட்டியின் நடுவர்கள்.

சவுரவ் கங்குலி தலைமையில் சச்சின், சேவாக், டிராவிட், யுவராஜ்சிங், மொகமது கைப், தினேஷ் மோங்கியா, நெஹ்ரா, ஜவஹர் ஶ்ரீநாத், ஹர்பஜன்சிங் களமிறங்குகின்றனர்.

ஆரம்பம் முதலே சரவெடியை ஆரம்பித்தது ஆஸ்திரேலியா, தொடக்க ஆட்டக்காரர்களான ஆடம் கில்கிறிஸ்ட் அரைசதமும் மேத்யூ ஹைடன் 37 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

அப்போதுதான் இந்தியர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். ஆனால் அடுத்த நடந்ததோ வேறு, கேப்டன் ரிக்கிபாயிண்டிங்கும், மார்டினும் இந்திய பவுலர்களின் பந்துக்களை சிதறடிக்கின்றனர்.

விவரம் தெரிந்து 90s கிட்ஸ்கள் பார்க்கும் முதல் உலகக்கோப்பை அது, பாயிண்டிங் ருத்ரதாண்டவத்தை கண்டு கண்ணீரும் கம்பளமுமாக அழுதுகொண்டிருந்தனர். அப்போதும் இந்திய அணியை விடுதாயில்லை பாயிண்டிங்.

அணியில் 8 வீரர்கள் பந்து வீசியும் பயனில்லை. இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 359 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்திருந்தது ஆஸ்திரேலியா.

இந்திய அணியின் தொடக்க ஆட்டகாரர்களாக களமிறங்கிய சச்சின் சொர்ப்ப ரன்னில் அவுட்டாக, உலகக்கோப்பை கனவு பாதி தகர்ந்தது இந்தியர்களுக்கு.

பிரட் லீ, மெக்ரத், பிச்சலின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். ஒரு பக்கம் சேவாக் பொறுப்போடு நம்பிக்கையளிக்கும்படி ஆடிவந்தார். இடையில் மழையும் குறுக்கிட்டது.

பின் மீண்டும் தொடங்கியது ஆட்டம். மைதானத்தில் ஈரப்பதம் இருப்பதால் பந்துகள் பவுண்டரி செல்வது என்பது குதிரைக்கொம்பானது.

இறுதியில் 234 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணி தோல்வியைத் தழுவியது. 8 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் என 140 ரன் அடித்த ரிக்கி பாயிண்டிங் ஆட்டநாயகனாகவும், சச்சின் டெண்டுல்கர் தொடர் நாயகனாகவும் தேர்வாகினர்.

அன்றைய இரவை 90s எளிதில் கடந்திருக்க மாட்டார்கள். எப்போதுதான் செய்தித்தாள்களில் ஒரு செய்தி வருகிறது. ஆஸ்திரேலியா அணி கேப்டன் ரிக்கி பாயிண்டிங் Speing Bat பயன்படுத்தியது தெரியவந்துள்ளதாக, மீண்டும் போட்டி நடத்துவது குறித்து ஆலோசிப்பதாகவும் போடப்பட்டிருந்தது.

விவரம் தெரியாத 90s கிட்ஸ்கள் வகுப்பு, வீடு, மைதானம் என எங்கு போனாலும் இந்த பேச்சுதான் ஓடுகிறது. தினமும் செய்தித்தாளைப் பார்த்துப் பார்த்து ஏமாற்றம் அடைந்த 90s கிட்ஸ்களுக்கு மிக நீண்டகாலம் கழித்துதான் தெரிந்தது அது ரூமர் என்று, ஒட்டுமொத்த 90s கிட்ஸ்களையும் உருக்கி, உருக்குலைத்த ரூமர் என்றால் இதுதான்.

-மா.நிருபன் சக்கரவர்த்தி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.