“இந்தியா மேப்பில் தவறு”.. தமிழக அரசின் DIPR வெளியிட்ட வீடியோவால் சர்ச்சை..

தமிழ்நாடு அரசின் DIPR வெளியிட்டுள்ள வீடியோ நமது நாட்டின் வரைபடத்தை சிதைத்து வெளியிட்டுள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பெரியார் வைக்கம் போராட்டத்தில் பங்கேற்றதன் நினைவாக கேரள மாநிலம் வைக்கம் நகரில்…

தமிழ்நாடு அரசின் DIPR வெளியிட்டுள்ள வீடியோ நமது நாட்டின் வரைபடத்தை சிதைத்து வெளியிட்டுள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பெரியார் வைக்கம் போராட்டத்தில் பங்கேற்றதன் நினைவாக கேரள மாநிலம் வைக்கம் நகரில் பெரியார் நினைவகமும், பெரியார் நூலகமும் தமிழ்நாடு அரசால் கட்டப்பட்டுள்ளது. வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வைக்கம் நகரில் உள்ள பெரியாரின் நினைவகத்தையும், நூலகத்தையும் புதுப்பித்திட ரூ.8.14 கோடி நிதி ஒதுக்கி ஆணையிட்டார். இதைத்தொடர்ந்து புதுப்பிக்கப்பட்ட பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தினை திறந்து வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கேரளாவிற்கு சென்றுள்ளார். இந்த விழாவில் கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில் இது தொடர்பான காணொளி, தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையின் சமூக வலைதள பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், காட்டப்பட்டுள்ள இந்திய வரைபடம் பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. இந்தியா மேப்பில் ஜம்மு காஷ்மீரின் ஒருபகுதி இடம் பெறாததால் பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டு எக்ஸ் தளப்பதிவில்,

“திமுகவின் அதிகாரப்பூர்வமற்ற ஊடகப் பிரிவான TN DIPR, நமது நாட்டின் வரைபடத்தை சிதைத்து வெளியிட்டுள்ளது. நமது சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் எப்போது என்று தெரியாத ஒருவரால் மாநிலம் வழிநடத்தப்படுகிறது என்றால், மாநில அரசின் துறைகளை கையாள தகுதியற்ற பொம்மைகளை அவர்கள் அமர்த்திக் கொள்கிறார்கள்” என பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.