திருக்குறளில் நிறைய ஆன்மீகம் உள்ளது-ஆளுநர் ரவி

“திருக்குறளில் நிறைய ஆன்மீகம் உள்ளது. ஆனால் அதை பற்றி பேச நாம் வெட்கப்படுகிறோம். திருக்குறள் நமக்கான ஆன்மீகத்தின் ஆதாரம்” என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்தார். சென்னை அண்ணா பல்கலைக்கழக விவேகானந்தா அரங்கில்…

“திருக்குறளில் நிறைய ஆன்மீகம் உள்ளது. ஆனால் அதை பற்றி பேச நாம்
வெட்கப்படுகிறோம். திருக்குறள் நமக்கான ஆன்மீகத்தின் ஆதாரம்” என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்தார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக விவேகானந்தா அரங்கில் குறள் சங்கத்தின் சார்பில்
திருக்குறள் மாநாடு 2022 நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி
மற்றும் அண்ணா பல்கலைகழக துணை வேந்தர் வேல்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு
மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றினர்.

முன்னதாக “திருக்குறள் உலகிற்கான முதல் நூல்” என்ற நூலை ஆளுநர் வெளியிட்டார்.

மேடையில் பேசிய அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ், “UNESCO திருக்குறளை பெரிய அளவில் விளம்பர படுத்த உள்ளது என்று நினைக்கும் போது
பெருமையாக உள்ளது. பள்ளி பருவத்தில் எல்லாரும் திருக்குறளை படித்து இருப்பீர்கள். எல்லா காலத்துக்கும் எல்லா இடத்துக்கும் பொதுவான அடிப்படை அறங்களை சொல்லும்
நூல்களில் மிகவும் உன்னதமானது திருக்குறள். சட்ட நூலாகவும், கவிதை நூலாகவும் திருக்குறள் உள்ளது. எனவே தான் அதை எல்லாரும் இலக்கிய நூலாக பார்க்கிறார்கள்.

ஒப்பற்ற இந்த நூலை பல்வேறு தேவைகளுக்காக பலர் படிக்கிறார்கள். உலகத்திற்கு
தேவையான எல்லா கருத்துகளும் இதில் சொல்லபட்டுள்ளது. கற்று விட்டால் செல்லும் இடமெல்லாம் உனக்கு சிறப்பு. யாருடைய தேவையும் உனக்கு இல்லை என்று “கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்கு தக” என்ற குரள் தெளிவாக சொல்கிறது” என்றார். மேலும் பல திருக்குறள்களை மேற்கோள் காட்டி அவர் பேசினார்.

தொடர்ந்து மேடையில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதாவது:

தமிழகத்திற்கு ஆளுநராக பொறுப்பேற்றவுடன் எனக்கு திருக்குறள் புத்தகம்
வழங்கப்பட்டது. கடந்த ஒரு ஆண்டாக ஒவ்வொரு திருக்குறளையும் படித்து அதன் முழுமையான அர்த்தத்தை புரிந்து கொள்ள முயற்சித்து வருகிறேன். திருக்குறளின்
மொழிபெயர்ப்பு நூல்கள் 12-க்கும் மேற்பட்டவை என்னிடம் உள்ளது. அவற்றை வைத்து
நான் படித்து வருகிறேன்.

குறளில் உள்ள ஒவ்வொரு வார்த்தையிலும் எவ்வளவு பெரிய அர்த்தங்கள் அமைந்துள்ளது. கடந்த ஆண்டு கோயம்புத்தூரில் திருக்குறள் மாநாட்டை முதல் முறையாக தொடங்கி வைத்தேன். தற்போது இரண்டாவது முறையாக சென்னையில் தொடங்கி வைத்துள்ளேன். ஒவ்வொரு முறை நான் அந்த புத்தகத்தை திறந்து படிக்கும் போது அதன் அர்த்தங்களை அதில் உள்ள ஆழ்ந்த சிந்தனைகளை கண்டு வியக்கிறேன்.

உலகத்திற்கு தேவையான வரிகளை ஒன்றரை வரிகளில் அடக்கிய திருவள்ளுவர் ஒரு மாபெரும் மேதை. திருக்குறளால் இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை. திருக்குறளின் முழுமையான அர்த்தத்தை புரிந்து கொள்ள ஒரு மனிதனுக்கு தன்
வாழ்நாள் முழுவதும் தேவைப்படும் என்று நான் நினைக்கிறேன்.

நிறைய கற்று தேர்ந்தவர்கள் திருக்குறளை மொழி பெயர்த்துள்ளார்கள். அவற்றை
படிக்கும் பொழுது என்னால் அதன் அர்த்தங்களை புரிந்து கொள்ள முடிகிறது.

நான் தமிழ் மொழியை கற்று வருகிறேன். என்னால் தமிழை புரிந்து கொள்ள முடிகிறது.
செய்தித்தாள்களை படிக்க முடிகிறது. ஆனால் பேசுகிற அளவுக்கு எனக்கு நம்பிக்கை
இல்லை. நான் தமிழில் பேசி உங்களை கஷ்டப்படுத்த விரும்பவில்லை.

திருக்குறளை படிக்கும் போது இது தர்மசாஸ்திரமும், நீதி சாஸ்திரமும் கலந்த
கலவையாக உள்ளது என்று நான் நினைக்கிறேன். பிறப்பு-இறப்பு என்ற ஒரு மனிதனின் வாழ்க்கை சுழற்சி முறையில் இருந்து அவனை விடுவித்துக் கொள்ள திருக்குறள் உதவியாக உள்ளது.

திருக்குறள் 341 முதல் 350 வரை உள்ள குறள்கள் எவன் ஒருவன் தன் கோபத்தை
கட்டுப்படுத்திக் கொள்கிறானோ அவன் கடவுளுக்கும் அரிதாக கிடைக்கும் உலகத்தையும்
கூட அடைய முடியும் என்று சொல்கின்றன.

எதிர்பாராத விதமாக திருக்குறள் என்பது மனிதனின் வாழ்க்கைக்கு தேவையான
வாழ்வியல் நெறிமுறைகளை மட்டுமே கொண்ட நூல் என கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக நாம் பேசி வருகிறோம்.

ஆனால் திருவள்ளுவர் ஆன்மீகத்தை பற்றி தன் குறள்களில் நிறைய பேசியுள்ளார்.
அதைப் பற்றி நாம் பேச வெட்கப்படுகிறோம். எனக்கு முன்னதாக பேசிய வேல்ராஜ்
திருக்குறள் ஒரு சிறந்த இலக்கியம் என குறிப்பிட்டார். அதில் எனக்கும் எந்த
சந்தேகமும் இல்லை.

முதன் முதலில் திருக்குறளை மொழி பெயர்ப்பு செய்த ஜி.யு. போப் பற்றி நான்
பேசும்போது சிலர் எதிர்த்து சத்தமிடுவார்கள். சத்தம் ஒருபோதும் உண்மையை
அழித்துவிட முடியாது. ஜி.யு. போப் தமிழை கற்றுக் கொண்டு திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்தபோது அதிலிருந்த ஆன்மீகத்தை கீழே தள்ளி விட்டார்.

திருக்குறளில் முதல் குரலில் வரும் ஆதி பகவன் என்ற வார்த்தையை அவர்
ஆங்கிலத்தில் கடவுள் ( GOD) என்று மொழிபெயர்க்காமல் (Primal Diety) என்று
மொழிபெயர்த்துள்ளார்.திருக்குறளை அதன் வடிவம் மாறாமல் மொழி பெயர்க்க வேண்டும். திருக்குறள் இந்தியாவின் அடையாளம் என்றார் ஆளுநர் ரவி.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.