கருணாநிதியின் இலக்கிய பணியை பாராட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை விடச் சிறந்த சின்னம் இருக்க முடியாது – ப.சிதம்பரம்!

கருணாநிதியின் இலக்கியப்பணியைப் போற்றுவதற்கு கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை விடச் சிறந்த சின்னம் இருக்க முடியாது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மதுரை புது நத்தம் சாலையில் சர்வதேச தரத்துடன் ரூ.114 கோடி…

கருணாநிதியின் இலக்கியப்பணியைப் போற்றுவதற்கு கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை விடச் சிறந்த சின்னம் இருக்க முடியாது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மதுரை புது நத்தம் சாலையில் சர்வதேச தரத்துடன் ரூ.114 கோடி மதிப்பீட்டில் ”கலைஞர் நூற்றாண்டு நூலகம்” கட்டப்பட்டுள்ளது. இதில், ரூ.99 கோடி நூலகக் கட்டிடத்துக்கும், ரூ.10 கோடி புத்தகங்கள் வாங்குவதற்கும், ரூ.5 கோடி தொழில்நுட்ப உபகரணங்கள் வாங்கவும் செலவிடப்பட்டுள்ளது. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம் இதுவரை ஆசியாவிலேயே பிரம்மாண்ட நூலகமாகப் பார்க்கப்பட்டது.

இந்த நூலகத்தின் கீழ்தளம், தரைத் தளத்துடன் 6 தளங்கள் கொண்ட கட்டிடமாக மொத்தம் 2 லட்சத்து 13 ஆயிரத்து 288 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது.பொதுப்பணித் துறையின் சார்பில் 16 மாதங்களில் இக்கட்டிடப் பணிகள் மிக விரைவாக முடிக்கப்பட்டுள்ளன. தென் மாவட்டங்களைச் சேர்ந்த குழந்தைகள், மாணவர்கள் ஆய்வாளர்கள், தமிழ் அறிஞர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் இந்நூலகம் பயன்பட வேண்டும் என்ற அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகம் காமராஜர் பிறந்தநாளான வரும் ஜூலை 15-ம் தேதி திறக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

https://twitter.com/PChidambaram_IN/status/1679449387381006336

இந்நிலையில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் “அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு இணையாகத் தென் தமிழ்நாட்டில் மதுரை மாநகரில் கட்டப்பட்டுள்ள ‘கலைஞர் நூற்றாண்டு நூலகம்’ 15.07.2023 அன்று திறக்கப்படுகிறது. இந்த நூலகத்தைத் திறந்து வைக்கும் தமிழ்நாடு முதலமைச்சரைப் பாராட்டுகிறேன். கருணாநிதியின் இலக்கியப்பணியைப் போற்றுவதற்கு இந் நூலகத்தை விடச் சிறந்த சின்னம் இருக்க முடியாது.” என பாராட்டி பகிர்ந்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.