கென் கருணாஸ் இயக்கி நடித்துள்ள ’யூத்’, ரன்வீர் சிங் நடிப்பில் ’துரந்தர் தி ரிவெஞ்ச்’, பவன் கல்யாண் நடிப்பில் ’உஸ்தாத் பகத்சிங்’ ஆகிய படங்கள் இந்த வாரம் வெளியாகி உள்ளன. இந்த படங்களின் மினி ரிவ்யூ இதோ உங்களுக்காக……!
யூத்
நடிகர் கருணாஸின் மகன் கென் இயக்கி நடித்துள்ள படம் ’யூத்’. தலைப்புக்கு ஏற்ப இந்த படம் யூத் சப்ஜெக்டாக உருவாகி உள்ளது. சுராஜ் வெஞ்சரமூடு, தேவதர்ஷினி தம்பதியினர் மகனான கென் +1, +2 படிக்கிற காலகட்டத்தில் அவர் வாழ்க்கையில் 3 காதல் வருகிறது. அந்த காதல் எப்படி வந்தது, என்ன நடக்கிறது. காதலால் படிப்புக்கு என்ன பிரச்னை…? வீட்டில் என்ன சிக்கல்…? கென் +2வில் பாஸ் ஆனாரா? என்பதை கலகலப்பாக, கலர்புல்லாக சொல்லியிருக்கிறார்கள்.
ஸ்கூல் பையன் கேரக்டருக்கு பக்காவாக பொருந்தி இருக்கிறார் கென். அவரின் குறும்பு, காமெடித்தனம் கலந்த ஆக்டிங், ஒவ்வொரு காதல் அனுபவத்திலும் அவர் அடைகிற சந்தோஷம், ஏமாற்றம், நண்பர்களுடன் அடிக்கிற லுாட்டி, அம்மா பாசம், அப்பா மீதான வெறுப்பு என பல இடங்களில் நடிப்பில் கலக்கி இருக்கிறார். பாடல்களிலும் பிரமாதமாக டான்ஸ் ஆடுகிறார். கிளைமாக்சில் சென்டிமென்ட் சீனிலும் முத்திரை பதித்து இருக்கிறார். தமிழ்சினிமாவில் யூத்தான ஹீரோ ரெடி.
3 ஹீரோயின்களும் ஸ்கூல் ஸ்டூடண்ட் ஆகவே வருகிறார்கள். மீனாட்சி தினேஷ் நடிப்பு ஸ்டைல் ஆக, கியூட் ஆக இருக்கிறது. பிரயான்சி நடிப்பு பப்ளியாக இருக்கிறது. சிறை அனிஷ்மா நடிப்பில் அழுத்தம், அக்கறை இருக்கிறது. இவர்களை தவிர, கென் மற்றும் ஹீரோயினின் நண்பர்கள் ஆகியோரும் தங்களின் காமெடி, கலாட்டாவால் மனதில் நிற்கிறார்கள். கென் அப்பாவாக, பேக்கரி கடைக்காரராக வருகிறார் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு. மனிதர் ஒவ்வொரு சீனிலும், டயலாக்கிலும் பின்னி எடுக்கிறார். குடித்துவிட்டு அவர் அடிக்கிற அலப்பறை, மனைவி மீது காட்டுகிற பாசம், மகனுன் பாச சண்டை, கிளைமாக்சில் இன்னொரு நடிப்பு என அனைவரின் பாராட்டையும் பெறுகிறார். ஹீரோ அம்மாவாக வருகிற தேவதர்ஷினியும் அந்த கேரக்டராக வாழ்ந்திருக்கிறார். ஒரே மகனுக்காக அவர் காட்டுகிற பாசம், ஃபீல் பண்ண வைக்கிறது.
ஸ்கூல் போர்ஷன், லவ் போர்ஷன், பிரண்ட்ஷிப் போர்ஷன் கலகலப்பாக நகர்கிறது. இடைவேளைக்கு பின் கொஞ்சம் போரடித்தாலும் கிளைமாக்ஸ் மனதில் நிற்கிறது. படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசை மற்றும் பாடல்கள் பெரிய பிளஸ். இந்த வயதில், இந்த படிப்பு படிக்கும்போது இத்தனை காதலா என கேள்வி வரலாம். ஆனாலும், அதை தவறாக காண்பிக்காமல், ஆபாசம், தம், தண்ணி இல்லாமல் கதையை நகர்த்தி சென்று இருக்கிறார் இயக்குனர் கென்.
கடைசியில் காதலை விட படிப்புதான் முக்கியம் என்ற மெசேஜ். பெற்றவர்கள் பாசத்தை, அவர்கள் நமக்காக கஷ்டப்படுவதை புரிந்துகொள்ள வேண்டும் என்ற காட்சிகள் படத்தை அனைத்து தரப்பையும் ரசிக்க வைக்கிறது. யூத் படத்தை இளைஞர்கள் ரொம்பவே ரசிப்பார்கள். மற்றவர்கள் அட,இப்படிப்பட்ட அனுபவங்கள், ஸ்கூல் லைப் நமக்கு அமையலையே என ஏங்குவார்கள்.
துரந்தர் தி ரிவெஞ்ச்
ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான துரந்தர் முதல் பாகம் 1,300 கோடிக்கு மேல் வசூலித்த நிலையில், துரந்தர் படத்தின் இரண்டாம் பாகம் ’துரந்தர் தி ரிவெஞ்ச்’ என்ற பெயரில் வெளி வந்துள்ளது. இந்தி தவிர, தமிழ், தெலுங்கிலும் மொழி மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்குள் செல்லும் இந்திய உளவாளி, அங்கே தாதாவாக மாறி, அங்குள்ள தீவிரவாதிகளை, இந்தியாவுக்கு எதிராக செயல்படுபவர்களை எப்படி அழிக்கிறார் என்பதே படத்தின் கரு.
பஞ்சாப்பில் ராணுவ வீரராக இருக்கும் ரன்வீர் சிங் சூழ்நிலை காரணமாக ஜெயிலுக்கு போகிறார். அவரை உளவாளியாக பயிற்சி கொடுத்து பாகிஸ்தானுக்குள் அனுப்புகிறார்கள். பாகிஸ்தானுக்குள் கொஞ்ச, கொஞ்சமாக வளர்ந்து, ஒரு கட்டத்தில் டான் ஆக மாறும் ரன்வீர், கடைசியில் அவர்கள் பிடியில் சிக்கினாரா? தப்பித்தாரா? உளவாளியாக எத்தகையாக சாதனை செய்தார் என்பதை பக்கா அதிரடி ஆக்சன் படமாக கொடுத்திருக்கிறார்கள்.
ரன்வீர் சிங்கின் நடிப்பு, கோபம், ஆக்சன், பழிவாங்கும் ரத்தவெறிதான் கதையின் முக்கியமான விஷயம். அதை சிறப்பாகவே அவர் செய்து இருக்கிறார். தீவிரவாதிகளை அவர் அடித்து துவைத்து ரத்தம் சொட்ட கொல்லும் காட்சிகள் விறுவிறு. சிலசமயம் அதுவே ஓவர் வன்முறையாக இருக்கிறது. ஆனால், அதை தேசபக்தி, எதிரிகள், பாகிஸ்தான் என கலந்து, கதையை ரசிக்கவைக்கிறார் இயக்குனர். அப்பாவியாக வந்து, கிளைமாக்சில் வேறு முகம் காட்டும் வரை மனிதர் நடிப்பில், சண்டைகாட்சிகளில் பின்னி எடுக்கிறார். தாதாக்களுக்கு இடையேயான சண்டைக்காட்சிகள், தீவிரவாத ஆதரவுகளை கொல்லும் சீன்கள், குறிப்பாக, கிளைமாக்ஸ் சண்டை ஆகியவை ஆக்சன் பிரியர்களுக்கு விருந்து. உளவுத்துறை அதிகாரியாக வரும் மாதவனின் கெட்அப், அவரின் சில சீன்கள் மிரட்டல். வில்லன்களாக அர்ஜூன் ராம்பால், சஞ்சய்தத் கலக்கி இருக்கிறார்கள். கொஞ்சம் காமெடி கலந்த கேரக்டரில் வரும் ராகேஷ், கடைசி சில நிமிடங்களில் யாரும் எதிர்பாராத ஒரு டுவிஸ்ட் கொடுத்து இருக்கிறார்.
ரன்வீரின் மனைவியாக வரும் சாரா அர்ஜூனுக்கு அதிக காட்சிகள் இல்லை. ஆனால், வில்லனாக வரும் சஞ்சய்தத் மிரட்டுகிறார். பாகிஸ்தானில் நடக்கும் சம்பவங்கள், பழிவாங்கல், கிளைமாக்ஸ் சண்டையை ஒரு தரப்பினர் கொண்டாடுவார்கள். ஹீரோ சம்பந்தப்பட்ட ஆரம்ப காட்சிகள், முதல் சண்டை, பல திருப்பங்கள் ரசிக்க வைக்கிறது. உளவாளியான ஹீரோ பிடிபட்டாரா…? என்ற சஸ்பென்ஸ், கிளைமாக்சுக்கு முந்தைய விஷயங்கள் நல்ல பரபரப்பு.
பிரதமராக மோடி பதவியேற்பது, பணமதிப்பு இழப்பு நடவடிக்கை, உபியில் 2 பெருந்தலைகள் சுட்டுக்கொல்லப்படுவது, தாவூத் இப்ராஹிம் என நிஜ சம்பவங்கள், நிஜமனிதர்களுடன், திரைக்கதை பயணிக்கிறது. அது சிலருக்கு பிடிக்கலாம், சிலருக்கு பிடிக்காமல் போகலாம். ஆனால், இயக்குனர் தனது கருத்தை, நிலைப்பாட்டை ஓபனாக சொல்லியிருக்கிறார். அதேபோல், இந்திய ராணுவம், உளவுத்துறை, தேசப்பக்தி போன்ற விஷயங்கள் அழுத்தமாக காண்பிக்கப்படுகிறது. பாகிஸ்தான் எதிர்ப்பு மனநிலை வெளிப்படையாக இருக்கிறது. வழக்கமான பாலிவுட் படங்கள் மாதிரி பிரமாண்ட பாடல் காட்சி, கலர்புல் சீன் இல்லை. படம் முழுக்க துரத்தல், சண்டை, ரத்தம், கொலை, பழிவாங்கல், திருப்பங்கள். துரந்தர் முதல் பாகத்தை விட, இதில் ஸ்பீடு அதிகம்.
படத்தின் நீளம் கிட்டத்தட்ட 4 மணிநேரம், சில இடங்களில் அதிக வன்முறை, ரத்தம் தெறிக்கிறது. நிறைய பிரச்சாரங்கள், வலதுசாரி போக்கு. ஆனாலும் படத்தில் நடிகர்களின் நடிப்பு திரைக்கதை, வசனங்கள், சண்டைக்காட்சிகள், கிளைமாக்ஸ் ஆகியவை ஒரு விறுவிறுப்பை ஏற்படுத்துகின்றன. இந்திய உளவாளிகள் பற்றி பல படங்கள் வந்திருந்தாலும் துரந்தர் தி ரிவெஞ்ச் கதை, திரைக்கதை, ஆக்சன், சொல்லும் மெசேஜ் ஆகியவற்றால் மாறுபட்ட பக்கா கமர்ஷியல் படமாக இருக்கிறது.
உஸ்தாத் பகத்சிங்
ஆந்திர மாநில துணை முதலமைச்சரும் நடிகருமான பவன் கல்யாண் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘உஸ்தாத் பகத் சிங்’. ஹரிஷ் சங்கர் இயக்கியுள்ள இப்படத்தில் ஸ்ரீலீலா, ராஷிகண்ணா , பார்த்திபன் ஆகியோர் நடித்துள்ளனர். நல்ல சிந்தனையில் வளரும் ஒரு இளைஞனின் கதை, அவன் அநீதிக்கு எதிராக எப்படி போராடுகிறான். என்ன நடக்கிறது என்பதை பவன் கல்யாணின் ஸ்டைல், காமெடி, ஆக்சன் கலந்து கொடுத்து இருக்கிறார்கள்.
போலீஸ் அதிகாரியாக பவன்கல்யாணும், முதல்வராக பார்த்திபனும் நடித்துள்ளனர். முன்னாள் முதல்வராக கே.எஸ்.ரவிக்குமார் வருகிறார். ஸ்ரீலீலா, பவன் சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள், டான்ஸ், இரண்டாம் பாதி பிளஸ். பவன்கல்யாண் ரசிகர்களுக்கு படம் நிச்சயம் பிடிக்கும்.
சிறப்பு செய்தியாளர் : மீனாட்சிசுந்தரம்












