சென்னையில் உள்ள 14 அமுதம் பல்பொருள் அங்காடிகள் மற்றும் அமுதம் நியாய விலைக் கடைகளில் கொள்முதல் விலைக்கு தக்காளி உள்பட அத்தியாவசிய பொருட்கள் நாளை முதல் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மட்டுமல்லாது நாடு முழுவதுமே தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இது மட்டுமல்லாது துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய மளிகை பொருள்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் நடுத்தரவர்க்க மக்களும், ஏழை மக்களும் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
நாடு முழுவதுமே விலையேற்றம் பேசுபொருளாகியுள்ள நிலையில், விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டுவருவது தொடர்பாக தமிழ்நாடு உணவுத்துறை சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது பொது மக்களின் நலன் கருதி உணவுத்துறை சார்பில் கொள்முதல் விலைக்கு அத்தியாவசிய பொருள்களை விற்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி, நாளை முதல் சென்னையில் உள்ள 14 அமுதம் பல்பொருள் அங்காடிகள் மற்றும் அமுதம் நியாயவிலைக் கடைகளில் தக்காளி, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகிய அத்தியாவசிய பொருட்கள் கொள்முதல் விலைக்கே விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தக்காளி ஒரு கிலோ ரூ. 60-க்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அத்தியாவசிய பொருட்களான துவரம் பருப்பு 500 கிராம்( அரை கிலோ ) ரூ.75க்கும், உளுத்தம் பருப்பு 500 கிராம் ரூ. 60க்கும் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.







