டெல்லியில் தேசிய புலனாய்வு முகமை (NIA) சார்பில் நடைபெற்ற வருடாந்திர பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டைத் தொடங்கி வைத்து அமித் ஷா பேசினார். அப்போது, பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழிக்க மத்திய, மாநில அரசுகளின் பாதுகாப்பு அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும், பயங்கரவாத வலையமைப்பின் ஒவ்வொரு பிரிவையும் கண்டறிந்து அதன் செயல்பாடுகளை முடக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

35 ஆண்டுகளுக்குப் பிறகு காஷ்மீரில் புதிய நிலை!
லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி லத்தீப் பட் கொல்லப்பட்டதன் மூலம், காஷ்மீர் முழுவதும் இந்தியாவில் பிறந்த பயங்கரவாதிகள் இல்லாத நிலை உருவாகியுள்ளது. கடந்த 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அமித் ஷா தெரிவித்தார். கடந்த நவம்பர் 11-ம் தேதி சிஆர்பிஎஃப் (CRPF) முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று துணை ராணுவப் படையினர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதல் தொடர்பாகத் தேடப்பட்டு வந்த லத்தீப் பட் மீது ரூ.15 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நவம்பர் 18 – புதன்கிழமை தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் லத்தீப் பட் சுட்டுக்கொல்லப்பட்டார். இதையடுத்து காஷ்மீரில் இந்தியாவில் பிறந்த பயங்கரவாதிகள் யாரும் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளதாக அமித் ஷா கூறியுள்ளார்.
பயங்கரவாத வலையமைப்பை முழுமையாக ஒழிக்க வேண்டும்!
பயங்கரவாதம், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகிய மூன்று அச்சுறுத்தல்களையும் ஒழிக்க வேண்டும் என்றால், வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ள குற்றவாளிகள் மற்றும் அவர்களின் மூளையாகச் செயல்படுபவர்களை இந்திய நீதிமன்றங்களின் முன்பு நிறுத்த வேண்டும் என்று அமித் ஷா தெரிவித்தார்.
கடந்த 2019-ம் ஆண்டு முதல் சிபிஐ, மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் உளவுத்துறை அமைப்புகளின் முயற்சியால் 36 நாடுகளில் இருந்து 303 தலைமறைவு குற்றவாளிகள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பயங்கரவாதத் தாக்குதல் நடைபெறுவதற்கு முன்பே பயங்கரவாதிகளைக் கண்டறிந்து கைது செய்வதே பாதுகாப்பு அமைப்புகளின் வெற்றியாக இருக்க வேண்டும் என்றும், இதற்கான செயல்திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
பிஎஃப்ஐ அமைப்புக்கு எதிரான நடவடிக்கை பாராட்டு!
தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) அமைப்பின் வலையமைப்பு முடக்கப்பட்டதை, நாடு முழுவதும் காவல்துறையினர் ஒருங்கிணைந்து செயல்பட்டதற்கான சிறந்த உதாரணமாக அமித் ஷா சுட்டிக்காட்டினார். ஒரே இரவில் 11 மாநிலங்களைச் சேர்ந்த காவல்துறையினர், மத்திய பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைந்து பிஎஃப்ஐ அமைப்புக்கு எதிராக மிகப்பெரிய நடவடிக்கையை மேற்கொண்டதாகவும், இந்த நடவடிக்கை உலக நாடுகளுக்கே ஒரு முன்னுதாரணமாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், பாகிஸ்தானைச் சேர்ந்த கேங்ஸ்டர் ஷஹ்சாத் பட்டியின் தலைமையிலான வலையமைப்பு, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். இந்த அமைப்பின் 40-க்கும் மேற்பட்ட செயல்பாட்டுக் குழுக்கள் நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 271-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அமித் ஷா தெரிவித்தார்.
மாநில காவல்துறைக்கு அமித் ஷா முக்கிய அறிவுறுத்தல்!
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும், துவாரகா முதல் காமாக்யா வரையிலும் பயங்கரவாதத்தை எதிர்கொள்ள ஒரே மாதிரியான செயல்திட்டத்தை ஒவ்வொரு காவல் நிலையம் வரையிலும் கொண்டு செல்ல வேண்டும் என்று அமித் ஷா தெரிவித்தார். மாநில காவல்துறைகளுக்கு இடையே ஒருங்கிணைந்த நடவடிக்கை இல்லாதது கடந்த காலங்களில் வெளிப்படையாகத் தெரிந்ததாகவும், தற்போது அந்தக் குறைபாடுகளைச் சரிசெய்யும் வகையில் ஒருங்கிணைந்த பாதுகாப்பு அமைப்பு உருவாக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
மேலும், மாநிலங்களின் பயங்கரவாத எதிர்ப்புப் படைகளில் (ATS) சைபர் நிபுணர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும், காவல் நிலைய அளவில் கிடைக்கும் உளவுத் தகவல்கள் டிஜிபி அலுவலகம் வரை சென்றடைவதற்கான வலுவான கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். எல்லையோர மாநிலங்களில் பிராந்திய பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
என்ஐஏ அமைப்பின் செயல்பாடுகள் விரிவாக்கம்!
தேசிய புலனாய்வு முகமையின் (NIA) செயல்பாடுகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக அமித் ஷா தெரிவித்தார். இதன்படி, புதிதாக 16 கிளை அலுவலகங்கள், இரண்டு மண்டல அலுவலகங்கள் மற்றும் 70 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இந்தியாவின் நலன்களைப் பாதிக்கும் குற்றங்களை விசாரிக்கும் அதிகாரமும் என்ஐஏ-வுக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
மேலும், 2023-ம் ஆண்டு பல்வேறு பாதுகாப்பு அமைப்புகளுக்கு இடையிலான தகவல் பரிமாற்றத்தை மேம்படுத்தும் வகையில் மல்டி ஏஜென்சி சென்டர் (MAC) நவீன தொழில்நுட்பத்துடன் மறுசீரமைக்கப்பட்டது. இதன் மூலம் இணையப் பாதுகாப்பு, போதைப்பொருள் கடத்தல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் தீவிரவாத நடவடிக்கைகள் அதிகம் நடைபெறும் பகுதிகள் கண்காணிக்கப்படுகின்றன. இதனுடன் தேசிய நினைவக வங்கியும் (National Memory Bank) உருவாக்கப்பட்டுள்ளதாக அமித் ஷா தெரிவித்தார்.
என்ஐஏ நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்கள் தொடக்கம்!
இந்த மாநாட்டின்போது, ‘Fail-Safe Investigation’ என்ற என்ஐஏ வெளியீட்டு நூலை அமித் ஷா வெளியிட்டார். மேலும், ‘Pushti’ என்ற இணையதளத்தையும் தொடங்கி வைத்தார். சண்டிகரில் என்ஐஏ அலுவலக வளாகம் அமைப்பதற்கான அடிக்கல்லை நாட்டியதுடன், டெல்லி மைதான்கரியில் அமைக்கப்பட்டுள்ள என்ஐஏ குடியிருப்பு வளாகத்தையும் திறந்து வைத்தார். தொடர்ந்து, என்ஐஏ அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் 7 பேருக்கு விருதுகளையும் வழங்கினார்.

இந்த மாநாட்டில் மத்திய உள்துறை இணை அமைச்சர் பண்டி சஞ்சய் குமார், உள்துறைச் செயலாளர் கோவிந்த் மோகன், உளவுத்துறை இயக்குநர் மகேஷ் தீட்சித் மற்றும் என்ஐஏ இயக்குநர் ஜெனரல் ராகேஷ் அகர்வால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் அனைவருக்கும் ஒரே இலக்கும், ஒருங்கிணைந்த செயல்பாடும், தெளிவான பொறுப்புணர்வும் இருக்க வேண்டும். அப்போதுதான் எதிர்பார்த்த வெற்றியை அடைய முடியும் என்றும் அமித் ஷா வலியுறுத்தினார்.





