தேனியில் ஒரே நாளில் ஒரே ரயிலில் அடுத்தடுத்து விபத்தில் இருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
12 ஆண்டுகளுக்குப் பின் அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு மதுரை – தேனி இடையே தினமும் இரண்டு முறை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த ரயிலை
போடி வரை நீட்டிபதற்கான வேலையும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று போடி வரை ரயில் தண்டவாளப்பணியை சோதனை செய்ய மதுரையிலிருந்து போடி வரை சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்த ரயில் தேனியில் தனியார் மருத்துவமனை அருகே வரும் போது உறவினர் வீட்டிற்கு வந்த கண்டமனூர்
கணேசபுரத்தைச் சார்ந்த காது கேளாத 40 வயதான லட்சுமி என்பவர் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அவர் மீது ரயில் மோதி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே
உயிரிழந்தார்.
பின்னர் அவருடைய உடலை ரயில்வே போலீசார் மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து பற்றி விசாரணை நடத்தி வரும் நிலையில் சோதனை ஓட்டத்திற்காக போடி சென்ற
ரயில் திரும்ப மதுரை செல்லும் போது இரவு 7மணியளவில் தேனி ஆட்சியர் அலுவலகம்
அருகே உள்ள தனியார் பள்ளி எதிர்புறம் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற
பெரியகுளம் வடகரை சார்ந்த கல்லூரி மாணவரான 19 வயது ராஜா மீது ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இவரது உடலும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ஒரே நாளில் ஒரே ரயிலில் அடுத்தடுத்து விபத்தில் இருவர் பலியான சம்பவம் தேனியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
—ரெ.வீரம்மாதேவி







