தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் திடீரென வீசிய சூறைக்காற்றால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிடப்பட்டிருந்த பல லட்சம் மதிப்புடைய வாழை மரங்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் கவலை
அடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் சுற்றுவட்டார பகுதிகளான குள்ளப்புரம், கோவில்புரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் வாழை,தென்னை பயிரிடப்பட்டுள்ளன. பருவமழை பொய்த்ததன் காரணமாக ஏற்கனவே விவசாயம் நலிவடைந்துள்ள நிலையில் 10 மாத காலமாக பல இன்னல்களுக்கு மத்தியில் விவசாயிகள் வளர்த்து வந்த வாழைமரங்கள் நேற்று மாலை திடீரென சூறைகாற்றுடன் பெய்த கனமழையால் முற்றிலும் சேதமடைந்துள்ளன.
அறுவடைக்கு இன்னும் சில நாட்களே இருந்த நிலையில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பிலான பல லட்சம் மதிப்புடைய வாழை மரங்கள் சேதமடைந்துள்ளதால்
விவசாயிகள் செய்வதறியாது திகைத்துள்ளனர்.
மேலும் தென்னை மரங்களும் காற்றின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் முறிந்து விழுந்துள்ளதில் மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் சில மணி நேரம் மின்சாரமின்றி தவித்தனர்.
வட்டிக்கு கடன் வாங்கி விவசாயம் செய்து வந்த நிலையில் தற்போது அதுவும் பறிபோன நிலையில் அடுத்து என்ன செய்வதென்றி தெரியாமல் பரிதவித்து வருகின்றனர்.எனவே அரசு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
—வேந்தன்







