திடீரெனத் தீப்பிடித்து எரிந்த கார்-அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய தாய், மகன்!

நாங்குநேரி அருகே திடீரென கார் தீப்பிடித்து எரிந்ததில் தாய் மற்றும் மகன் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தேனி மாவட்ட முன்னாள் திமுக செயலாளர் மனோகர பாண்டியன். இவர் மனைவி மல்லிகா, மகன் சாய்துர்கேஷ்…

நாங்குநேரி அருகே திடீரென கார் தீப்பிடித்து எரிந்ததில் தாய் மற்றும் மகன் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

தேனி மாவட்ட முன்னாள் திமுக செயலாளர் மனோகர பாண்டியன். இவர் மனைவி மல்லிகா, மகன் சாய்துர்கேஷ் ஆகியோருடன் தற்போது நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை அருகே உள்ள கேடிசி நகரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில்  மல்லிகாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் காரில் நாகர்கோவிலில் உள்ள
மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்து சென்றனர்.

காரை மகன் சாய்துர்கேஷ் ஓட்டி சென்றார். நாங்குநேரி சுங்கச் சாவடி அருகே வரும் போது காரை ஓரமாக நிறுத்திவிட்டு அங்கிருந்த ஃபாஸ்ட் ட்ராக் மையத்தில் ரீசார்ஜ் செய்வதற்காக சாய்துர்கேஷ் காரில் இருந்து இறங்கினார். அப்போது காரில் முன் பகுதியில் இருந்து புகை வருவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் காரில் இருந்த தீயணைப்பு கருவி மூலம் தீயை அணைக்க முயற்சி செய்தார். ஆனால் காற்று வேகமாக வீசியதால் மளமள வென காரின் மற்ற பகுதிக்கும் தீ பரவியது.

இதையடுத்து காரில் இருந்த மல்லிகாவை பத்திரமாக வெளியேற்றினர். பின்னர் சுங்கச்சாவடி ஊழியர்கள் உதவியுடன் தீயை அணைக்க முயன்றும் அது முடியாததால் நாங்குநேரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தீயணைப்பு துறையினர் தீ பரவாமல் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த திடீர் தீ விபத்தில் கார் முற்றிலும் எரிந்து நாசமானது.

கார் நிறுத்தி இருந்தபோது தீப்பிடித்ததால் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தகவல் அறிந்து அங்கு வந்த நாங்குநேரி சப் இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். பின் மாற்று கார் ஏற்பாடு செய்து இருவரையும் பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

—-ரெ.வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.