நடிகை த்ரிஷாவை தொடர்ந்து, நடிகர் ஜெயம் ரவியும் தன்னுடைய ட்விட்டர் பெயரை அருண்மொழிவர்மன் என மாற்றியதால், அவரது ப்ளூ டிக் பறிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகிய பொன்னியின் செல்வன் முதல் பாகம், கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி உலகெங்கிலும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. லைகா புரொடக்சன்ஸ் – மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்த இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஷ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, ஷோபிதா, ஐஷ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்ட மிகப் பெரிய நடிகர் பட்டாளம் கால்பதித்திருந்தது.
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த இத்திரைப்படம், புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகப்பட்டது. பொன்னியின் செல்வன் முதல் பாகம், ரூ.500 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், வெற்றிப் படமாகவே பொன்னியின் செல்வன் கருதப்படுகிறது.
முதல் பாகமே ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ம் தேதி உலகம் முழுக்க வெளியாகிறது. இந்த படத்திற்கான புரொமோஷனில் படத்தில் நடித்த விக்ரம், த்ரிஷா, கார்த்தி மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்ட படக்குழுவினர் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் ஜெயம் ரவியின் “அருண்மொழிவர்மன் ” கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியாக உள்ள நிலையில் நடிகர் ஜெயம் ரவி தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கில் தனது பெயருக்கு பதிலாக “அருண்மொழிவர்மன்” என பெயர் மாற்றியுள்ளார். ட்விட்டரின் விதிகளின் படி ப்ளு டிக் பெறுவதற்கு தகுந்த ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்.
ஆவணங்களில் இல்லாத பெயரை மாற்றினால் ப்ளு டிக் பறிக்கப்படும். அதன்படி முதலில் நடிகை த்ரிஷா தனது ட்விட்டர் கணக்கில், த்ரிஷா கிருஷ்ணன் என்றிருந்த பெயரை “குந்தவை” என மாற்றியதால் அவரின் ப்ளு டிக் மார்க் டிவிட்டர் நிறுவனத்தால் எடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது நடிகர் ஜெயம் ரவியும் தனது ட்விட்டர் கணக்கில் “அருண்மொழிவர்மன் ” என பெயர் மாற்றியதால் அவரின் ட்விட்டர் கணக்கில் இருந்த ப்ளு டிக் மார்க்கும் ட்விட்டர் நிறுவனத்தால் எடுக்கப்பட்டுள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா










