வடிவேலு பட பாணியில் சாமி கும்பிட்டு திருடச் சென்ற கொள்ளையனை சுற்றி வளைத்து பிடித்த போலீஸ். கொள்ளையன் சிக்கியது எப்படி?
சுந்தர்.சி நடிப்பில் வடிவேலு நடிப்பில் 2010ம் ஆண்டு வெளியான நகரம் படத்தில் வடிவேலு திருடன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதில் இடம்பெற்ற காட்சி ஒன்றில் “கடவுளே கதவ திருந்ததும் கண்ணுல பட்றது எல்லாம் பொக்கிஷமா இருக்கனும்பா என்று சொல்லிவிட்டு அவர் திருட செல்வார். அதுபோன்ற ருசீகர சம்பவம் ஒன்று கேரளாவில் நடந்துள்ளது.
கேரளாவின் கோட்டயம் அடுத்த வெள்ளூர் பகுதியில் மாத்தியூ – சூசாம்மா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுடைய மகள் சோனா, திருமணமாகி பெரம்பலூரில் கணவருடன் வசித்து வருகிறார். வீட்டில் வயதான தாய் – தந்தையர் இருப்பதால் சோனா, கேரளாவில் உள்ள வீட்டில் சிசிடிவி கேமராக்களை வைத்து செல்போன் மூலம் கண்காணித்து வந்தார். எதேச்சையாக செல்போனில் சிசிடிவி காட்சிகளை பார்த்தபோது, வீட்டின் மாடி பகுதியில் நைட்டி அணிந்த ஒரு ஆண் நிற்பது தெரிந்துள்ளது. திருடனாக இருக்கலாம் என சந்தேகித்த சோனா, உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மாடியில் பதுங்கியிருந்த திருடனை சுற்றி வளைத்து கைது செய்தனர். கொள்ளையன், வீட்டிற்கு வரும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி இருக்கின்றன. அதில், அக்கம் பக்கத்தில் யாரேனும் இருக்கிறார்களா என்று நோட்டமிடும் அந்த கொள்ளையன், மெதுவாக மாடிப்படி ஏறி வருகிறார். பின்னர் தன்னுடைய அடையாளத்தை மறைக்க நினைத்த அவர், கீழே இறங்கி அருகில் இருந்த நைட்டி ஒன்றை உடுத்திக்கொள்கிறார். பின்பு மெதுவாக படிகட்டுகளில் ஏறும் கொள்ளையன், படிகட்டுகளை தொட்டு வணங்கி திருட செல்கிறார்.
போலீசாரிடம் சிக்கியுள்ள கொள்ளையன், கோட்டயம் கீழூர் பகுதியைச் சேர்ந்த ராபின்சன் என்பதும், தற்போது ஆலப்புழா அருகே வாடகை வீட்டில் வசித்து வருவதும் தெரியவந்தது. ராபின்சன் பிரபல கொள்ளையன் என்றும், பகல் நேரங்களில் முதியவர்கள் தனியாக வசிக்கும் வீடுகள் எதுவென்று நோட்டமிட்டு, இரவு நேரத்தில் முதியவர்களை தாக்கி பணம், நகைகளை கொள்ளையடிப்பது வழக்கம் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.







