ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு விரைவில் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட கோரிய மேல்முறையீடு மனு மற்றும் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனு ஆகியவை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், மழை காரணமாக ஏற்பட்ட பாதிப்பை சீரமைக்கும் வகையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் தரப்பில் கடந்த நவம்பரில் ஒரு இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்ட நிலையில் பின்னர் விசாரணை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. இதனையடுத்து, வேதாந்தா நிறுவனத்தின் தரப்பில் நீதிபதி சந்திரசூட் அமர்வில் முறையிடப்பட்டது. அதில், ஸ்டெர்லைட் பராமரிப்பு தொடர்பான பிரதான வழக்கு இன்று விசாரணைக்காக பட்டியலிடப்பட்டிருந்த நிலையில் அது திடீரென நீக்கப்பட்டுள்ளது. அதனால் அந்த மனுவை அவசர வழக்காக பட்டியலிட்டு உடனடியாக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
அதற்கு, நீதிபதி சந்திரசூட், உச்சநீதிமன்ற விசாரணை அமர்வின் சூழலை பொறுத்து வழக்கை பட்டியலிடுவதாக தெரிவித்தார். ஆனால், வேதாந்தா நிறுவனம் தரப்பில், விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு பின்னர் நீக்கப்பட்டதால்தான் இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என மீண்டும் கோரிக்கை வைப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான பிரதான வழக்கு விரைவில் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.







