3 கோடியே 70 லட்சம் செலவில் நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் கலையரங்கம் கட்ட அமைச்சர் மா சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டினார்.
சென்னை நந்தனம் ஆடவர் கலைக்கல்லுாரி வளாகத்தில் கலையரங்கம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். 895 சதுர மீட்டர் பரப்பளவில், 900 இருக்கைகளுடன் கலையரங்கம் கட்டப்பட உள்ளது.
இந்த விழாவில் துணை மேயர் மகேஷ் குமார் கலந்து கொண்டார்.
அதன் பின் செய்தியாளரை சந்தித்த மா. சுப்பிரமணியன் தெரிவித்ததாவது..
“சென்னைக்கு பல அடையாளங்கள் இருந்தாலும் நந்தனம் அரசு கலைக்கல்லுாரி ஒரு சிறப்பான அடையாளமாக பார்க்கப்படுகிறது. சைதாப்பேட்டை தொகுதிக்கு பெருமை சேர்ந்தவர் கலைஞர். இவர் இந்த தொகுதியில் வெற்றி பெற்றுதான் முதலமைச்சரானார். கலைஞர் இந்த கல்லுாரியை தொடங்கி வைத்தது மட்டுமின்றி கல்லுாரியில் நடந்த பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார்.
இந்த கல்லுாரி முதல்வர் கலையரங்கம் தேவை இருக்கிறது என கோரிக்கை வைத்தார். எனவே முதல் முறையாக இந்த கல்லுாரிக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 3 கோடியே 70 லட்சம் ஒதுக்கீடு செய்து மொத்தம் 4000 மாணவர்களுக்கு கலையரங்கம் கட்டுப்பட உள்ளது . ஆற்காடு, காஞ்சிபுரம், வேலுார் உள்ளிட்ட புறநகர் பகுதி மாணவர்கள், மிகவும் பின் தங்கிய மாணவர்கள் படிக்கும் கல்லுாரி என்பதால் கூடுதல் சிறப்புமிக்கது . தமிழ்நாட்டில் மட்டும் தான் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் மிக பாதுகாப்பாக உள்ளனர். அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற மாநிலம் தமிழ்நாடு.
வைரஸ் காய்ச்சலில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் . சிறப்பு முகாம்கள் அமைக்கும் அளவுக்க நிலைமை இல்லை என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார். அதனையடுத்து கல்லுாரி முதல்வர் ஜெயச்சந்திரன் நந்தனம் கலை கல்லுாரி என்ற பெயர் தவறு அதை மாற்றி நந்தவனம் கலைஞர் கல்லுாரி என மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதனை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார்.
-அனகா காளமேகன்







