ராசிபுரம் அருகே லிப்ட் கேட்ட மாணவியை இருசக்கர வாகனத்தில் காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பான புகாரில் இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
கரூரை சேர்ந்த மாணவி ஒருவர் ராசிபுரம் அருகே தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு எம்பிஏ படித்து வருகிறார். இவர் நேற்று காலை கரூரில் இருந்து ராசிபுரம் சென்றுள்ளார். ஆண்டகளூர்கேட் பகுதியில் இறங்கிய அவர், கல்லூரிக்கு நேரம் ஆனதால் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவரிடம் லிப்ட் கேட்டுள்ளார். மாணவியை இருசக்கர வாகனத்தில் ஏற்றிச்சென்ற அந்த இளைஞர், தன் அக்கா பிரசவ வழியில் துடித்துக் கொண்டிருப்பதாக கூறி அணைப்பாளையம் புறவழிச் சாலை வழியாக சிங்களாந்தபுரம் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அங்குள்ள மழை கரடு அடிவாரப் பகுதிக்கு அம்மாணவியை அழைத்துச் சென்றவர் அங்கு வலுக்கட்டாயமாக மாணவியை மானபங்கம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் மாணவியிடம் இருந்து 140 ரூபாய் மற்றும் செல்போனை பறித்து கொண்டு ஆடையே இல்லாமல் விட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்றாதாக தெரிகிறது.
மதியம் மூன்று மணியளவில் மயக்கம் தெளிந்த மாணவி கூச்சலிட்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ராசிபுரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத்தொடர்ந்த அந்த பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகள் மூலம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி தொப்பப்பட்டி ராஜவீதியை சேர்ந்த ஐயப்பன் என்ற மணிகண்டனை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், டிப்ளமோ முடித்துள்ள இவர், ஒன்பதாம் பாலிகாடு பகுதியில் உள்ள கரும்பு அரவை ஆலையில் ஊழியராக பணியாற்றி வருவது தெரியவந்தது.







