சிறுமுகை அருகே விளைநிலத்தில் புகுந்த முதலையை பிடிக்கும் பணி தீவிரம்!

சிறுமுகை அருகே மொக்கைமேடு பகுதியில் விளை நிலத்தில் புகுந்த 12 அடி நீளமுள்ள முதலையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாவட்டம்,  சிறுமுகை அருகே உள்ள மொக்கை மேடு பகுதியைச்…

சிறுமுகை அருகே மொக்கைமேடு பகுதியில் விளை நிலத்தில் புகுந்த 12 அடி நீளமுள்ள முதலையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம்,  சிறுமுகை அருகே உள்ள மொக்கை மேடு பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன்(45).  இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் வாழை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார்.  இந்த நிலையில் அவர் இன்று (மார்ச்.12) காலை வழக்கம் போல தனது விவசாய நிலத்தை பார்வையிடுவதற்காக சென்றுள்ளார்.  அப்போது, வாழை மரங்களுக்கு இடையே மரம் போன்ற ஒன்று தென்பட்டுள்ளது.

பின்னர் நன்றாக பார்த்தபோது அது சுமார் 12 அடி நீளமுள்ள முதலை என்பது தெரிய வந்தது.  இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோஜ் குமாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.   இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் முதலையை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


மேலும் முதலையை காண அப்பகுதி மக்கள் திரண்ட நிலையில் வனத்துறையினர் அவர்களை அப்புறப்படுத்தினர்.  எவ்வித பாதிப்பும் இன்றி வலையை பயன்படுத்தி முதலையை பிடிக்க அவர்கள் முயன்று வருகின்றனர்.  தற்போது கோடை வெயில்  அதிகமாக இருப்பதால் அணைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.
இதனால் பவானிசாகர் அணையின் நீர் தேக்க பகுதியில் இருந்த முதலை அங்கிருந்து சுமார் ஒரு கிமீ தொலைவில் உள்ள தமிழ்செல்வனின் தோட்டத்திற்கு வந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.