”மகளிர் இடஒதுக்கீடு மசோதாவால் நம் நாட்டு பெண்களுக்கு உடனடியாக எந்த பலனும் இல்லை!” – காங்கிரஸ் கட்சி விமர்சனம்

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவால் நம் நாட்டு பெண்களுக்கு உடனடியாக எந்த பலனும் இல்லை, 2027 மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பிறகே மசோதா அமலுக்கு வரும் சூழல் உள்ளது என காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது. நாடாளுமன்ற…

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவால் நம் நாட்டு பெண்களுக்கு உடனடியாக எந்த பலனும் இல்லை, 2027 மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பிறகே மசோதா அமலுக்கு வரும் சூழல் உள்ளது என காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரின் முதல் நாள் அமா்வு பழைய கட்டடத்தில் நேற்று நிறைவடைந்த பின்னா் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மகளிா் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த நிலையில், இன்று புதிய நாடாளுமன்றத்தில் கூடிய முதல் மக்களவை கூட்டத்தில் இந்த மசோதாவை சட்டத்துறை இணையமைச்சர் அர்ஜூன் ராம் மெஹ்வால் தாக்கல் செய்தார்.

இதனை அடுத்து சட்டத்துறை இணையமைச்சர் அர்ஜூன் ராம் மெஹ்வால் பேசியதாவது:

மகளிருக்கான தொகுதிகள் சுழற்சி முறையில் மாற்றப்பட்டுக்கொண்டே இருக்கும். பெரும்பாலான கட்சிகள் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. தற்போது கொண்டுவரப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதா, மக்களவையின் மூன்று பதவிக்காலங்களுக்குப் பொருந்தும் என்று தெரிவித்தார்.

இந்த மசோதா மீதான விவாதம் நாளை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல், மாநிலங்களவையில் வியாழக்கிழமை இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த மசோதா குறித்து காங்கிரஸ் கட்சி சார்பில் X தள பக்கத்தில் பதிவொன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மசோதாவால் நம் நாட்டு பெண்களுக்கு உடனடியாக எந்த பலனும் இல்லை. ஏனெனில் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு பிறகுதான் இந்த மசோதா அமலுக்கு வரும். 2021ம் ஆண்டிலேயே நடத்தப்பட வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்னும் நடத்தப்படமாலேயே உள்ளது. இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027 அல்லது 2028ல் தான் நடைபெறும் என வெறும் தகவலாக சொல்லப்படுகிறது;

இந்த மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பிறகே தொகுதி மறுவரையறை செய்யப்பட்டு, அதன் பிறகே இந்த மசோதா அமலுக்கு வரும் சூழல் உள்ளது. மோடி அரசு நம் நாட்டு பெண்களை ஏமாற்றியதோடு அவர்களின் நம்பிக்கையயும் சிதைத்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.