பெண்ணின் திருமண வயது 18-லிருந்து 21 ஆக உயர்த்த ஒன்றிய அமைச்சரவை முடிவுசெய்துள்ளதை பாராட்டுகிறோம், வரவேற்கிறோம். விரைந்து நாடாளுமன்றத்தில் சட்டத்தை நிறைவேற்றுவது காலத்தின் கட்டாயம்! என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
“பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் சட்டத் திருத்தம் செய்ய ஒன்றிய அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது. விரைவில், அதற்கேற்ப திருமண வயதை பெண்ணுக்கு 21 ஆக (தற்போது 18 வயது) உயர்த்தும் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்படும் என்பது மிகவும் வரவேற்கத்தக்க மாற்றமாகும்!
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதை தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும், திராவிடர் கழகமும் பல ஆண்டுகளுக்கு முன்பே வரவேற்ற பழைய வரலாறு இன்றைய புதிய தலைமுறையினருக்குத் தெரிய வாய்ப்பில்லை.
‘ராய் ஹரிபிலாஸ் சாரதா’ சட்டம் (Bill for Age of Consent) என்ற சட்ட வரைவு, பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த இந்திய சட்டசபையில் டில்லியில் தாக்கலானபோது, பல சனாதனிகளும், எம்.கே.ஆச்சாரியார் போன்ற வைதீகக் குடுக்கைகளும் அம்மன்றத்திலேயே கடுமையாக எதிர்த்தனர்.
அப்போது (1929-இல்) தந்தை பெரியார், அவர்களை மறுத்து தனது பச்சை அட்டைக் ‘குடிஅரசு’ வார ஏட்டில் பதில் தந்தார். பெண்களுக்கு ‘பால்ய விவாஹம்‘ என்ற குழந்தைத் திருமணங்கள் நடத்தப்பட்டு, பல பெண்கள் பூப்பு அடைவதற்கு முன்பேகூட அந்த ‘விவாஹக’ முறையின் காரணமாக – தாம்பத்தியத்தில் உயிரிழந்தது அப்போது சர்வ சாதாரணமாக நடைபெற்ற நிகழ்வுகள் ஆகும்!
பெண்கள் படிக்கவே கூடாது என்ற கருத்து; பெண்கள் ஒருபோதும் சுதந்திரத்திற்குத் தகுதியானவர்கள் அல்லர்; பெண்களுக்கு தனிச் சொத்துரிமை கொடுக்கவே கூடாது என்பன போன்ற கடைந்தெடுத்த பிற்போக்குக் கருத்துகளை எதிர்த்து தெற்கே தந்தை பெரியாரும், வடக்கே டாக்டர் அம்பேத்கரும் செய்த பிரச்சாரமும், பாடுபட்டதும் இன்று காலத்தை வென்று அமைதிப் புரட்சியை உருவாக்கி வருகிறது!
1929-இல் செங்கற்பட்டு சுயமரியாதை மாகாண மாநாட்டிலும், பிறகு நடைபெற்ற பல மாநாடுகளிலும் திருமண வயது 16 வயதுக்கு மேற்பட்டிருக்கவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டே வந்துள்ளது.
தந்தை பெரியார் பல சுயமரியாதைத் திருமண மேடைகளில் ‘‘21 வயது வரை பெண்கள் திருமணம்பற்றியே யோசிக்காமல், படிப்பு, சொந்தக்காலில் சுதந்திரமான வாழ்க்கை வாழ்வது எப்படி என்பதுபற்றியே சிந்தித்து, பிறகே திருமணம் செய்துகொள்ளுவது நல்லது. மனப்பக்குவத்தில் நல்ல முதிர்ச்சியுடன் தனது வாழ்விணையரைத் தேர்வு செய்ய முடியும்.
குழந்தைப் பேறு என்பதும் அதன் பிறகே ஏற்படும் வாய்ப்பும் அதன்மூலம் கிடைப்பதால், தனிப்பட்ட அளவில் இப்பெண்ணிற்கும், அவரது குடும்பத்திற்கும்கூட நல்லபயன் ஏற்படும். அதேநேரத்தில், நாட்டின் மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு அதுவே ஒரு தடுப்பணை கட்டியது மாதிரி; மக்கள் தொகைப் பெருக்கத்தைக் குறைத்திட வாய்ப்புகள் உருவாகக் கூடும்!’’ என்பதை வலியுறுத்திக் குறிப்பிட்டுள்ளார்.
ஒன்றிய அரசின் இந்தத் திட்டம் பாராட்டத்தக்கது – அரசியல் கட்சிக் கண்ணோட்டமின்றி வரவேற்கிறோம். இந்திய மனித சராசரி வாழ்வு இப்போது ஆணுக்கு சுமார் 67 வயது; பெண்ணுக்கு 70 வயது என்று பெருகி வளர்ந்தோங்கிய நிலையில், பெண்களின் திருமண வயதை 18-லிருந்து 21 வயதாக – மூன்று ஆண்டுகள் உயர்த்துவது பொதுநலக் கண்ணோட்டத்திலும் மிகவும் வரவேற்கத்தக்கது.
‘மாறுதலை ஏற்க முடியாது’ என்று எப்பேர்ப்பட்ட முதலைப்பிடி மனிதர்களும், பிடிவாதம் காட்ட முடியாது. பழைமைவாத பத்தாம்பசலி கூட கால வளர்ச்சியில் மாறித்தான் தீரவேண்டும் – இது காலத்தின் கட்டாயம்!
‘சனாதனம்‘ என்ற பெயரில் மாறுதலை எதிர்த்தால், அது கடல் அலையைத் தடுத்து நிறுத்திட ஆணை பிறப்பித்த கான்யூட் மன்னன் கதைபோலத்தான் ஆகிவிடுமே தவிர, வேறில்லை.
எவ்விதத் தயக்கமும் இன்றி விரைந்து சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றி, நாட்டையும், வீட்டையும் காப்பாற்ற முன்வருதல் இன்றிமையாதததும் – இந்த காலகட்டத் தேவையுமாகும்!” என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.