பித்தப்பைக்கு பதில் கருப்பையை அகற்றிய மருத்துவர்! இந்த கொடுமை நடந்தது எங்கு தெரியுமா?

உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் மருத்துவர்களின் அலட்சியத்தால் அறுவை சிகிச்சையின் போது பித்தப்பைக்கு பதிலாக பெண்ணின் கருப்பையை அகற்றிய கொடுமை 3 ஆண்டுகளுக்கு பின் தற்போது அம்பலமாகியுள்ளது.  வாரணாசியின் சோலாப்பூர் பகுதியில் உள்ள பேலா கிராமத்தில்…

உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் மருத்துவர்களின் அலட்சியத்தால் அறுவை சிகிச்சையின் போது பித்தப்பைக்கு பதிலாக பெண்ணின் கருப்பையை அகற்றிய கொடுமை 3 ஆண்டுகளுக்கு பின் தற்போது அம்பலமாகியுள்ளது. 

வாரணாசியின் சோலாப்பூர் பகுதியில் உள்ள பேலா கிராமத்தில் வசித்து வருபவர் 26 வயதே நிரம்பிய உஷா மௌரியா. இவர் தனது வயிற்றுப் பகுதியில் கடுமையான வலியை அனுபவித்து வந்துள்ளார். அடிக்கடி கடுமையான வலியை அனுபவித்து வந்த உஷா சமூக சேவகரான ஆஷா என்பவரின் உதவியுடன் கோலாவில் மருத்துவர் பிரவீன் திவாரி நடத்தும் தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு உஷாவின் பித்தப்பையில் கற்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து முதல் கொரோனா தொற்று பரவலின் முழு பொதுமுடக்க காலமான 2020 மே 28-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பித்தப்பையை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சைக்கு பின் வலி இல்லாமல் இருப்பதாக தெரிவித்த உஷா, இரண்டு நாட்களுக்கு பின்னர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இந்த நிலையில், இந்த ஆண்டு மார்ச் மாதம், உஷாவுக்கு வயிற்றுப் பகுதியில் மீண்டும் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் செரிமானத்திற்கான மாத்திரையை எடுத்துக் கொண்டுள்ளார், ஆனால் வலி குறையவில்லை.

இதனால் மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு உஷா மௌரியா சென்றுள்ளார். அங்கு அவருக்கு முழுமையான பரிசோதனை செய்யப்பட்டதில், அவரது பித்தப்பையில் கற்கள் இருப்பது கண்டறியப்பட்டது, ஆனால் அவரது கருப்பை காணவில்லை என்று மருத்துவர்கள் கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த உஷா சோதனை அறிக்கைகளுடன் மீண்டும் கோலாவில் மருத்துவர் பிரவீன் திவாரியிடம் சென்று விளக்கம் கேட்டுள்ளார், ஆனால் அவர் அவரை மிரட்டத் தொடங்கியுள்ளார்.

இந்த பிரச்னை தொடர்பாக காவல் நிலையத்தில் உஷா புகார் தெரிவித்துள்ளார். ஆனால் மருத்துவர் மீது எந்தவித நடவடிக்கையும் இல்லை. இதனைத் தொடர்ந்து அவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார், நீதிமன்ற உத்தரவின்பேரில், மருத்துவ அலட்சியத்திற்காக குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர் மீது மற்றவர்களின் உயிருக்கு அல்லது தனிப்பட்ட பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் செயல் மூலம் கடுமையான காயம் ஏற்படுத்துதல், அமைதியை மீறும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதிப்பு போன்றவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், காவல்துறையின் விசாரணைக்கு பிறகு மருத்துவர்கள் குழு இந்த விவகாரத்தை விசாரிக்கும் என்று தலைமை மருத்துவ அதிகாரி சந்தீப் சௌத்ரி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.