தாழ்வு மண்டலம், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வடகிழக்கு இலங்கை கடலோரப்பகுதிகளில் முல்லைத்தீவிற்கு (இலங்கை) அருகில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடந்தது. இது மேலும், மேற்கு திசையில் நகர்ந்து வலுவிழந்து, வடக்கு இலங்கை மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவியது.
இது நேற்று காலை (11-01-2026) 05.30 மணி அளவில் மேலும், வலுவிழந்து தெற்கு கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவியது. இது 08.30 மணி அளவில் மேலும், வலுவிழந்து தெற்கு கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாக நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இதன் காரணமாக, இன்று (ஜன.12) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.







