கர்நாடக அணைகளில் இருந்து கூடுதல் நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், ஒகேனக்கல் அருவிக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 17 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் 10 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனையடுத்து காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நேற்று மாலை நிலவரப்படி விநாடிக்கு 23,000 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
இதனையடுத்து ஒகேனக்கல் அருவிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 11 ஆயிரம் கன அடியாக இருந்து நீர்வரத்து தற்பொழுது 17,000 கன அடியாக உயர்ந்துள்ளது.
இதனிடையே கர்நாடகா மற்றும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கல் ஆற்றில் பரிசல் இயக்க தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் நீர்வரத்து அதிகரித்தால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கும் மாவட்ட நிர்வாகம் தடை விதிக்க வாய்ப்பு உள்ளது.







