இயக்குநர் வசந்தபாலனின் இயக்கத்தில் உருவாகும் ‘அநீதி’ திரைப்படத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
கைதி, மாஸ்டர் படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவர் அர்ஜூன்தாஸ். இவர் இயக்குநர் வசந்தபாலனின் இயக்கத்தில் உருவாகும் ‘அநீதி’ திரைப்படத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் மாரியம்மாவாக நடித்து பெரும் கவனம் பெற்ற திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் பேசும் துஷாரா விஜயன் நாயகியாக நடித்திருக்கிறார்.
இயக்குநர் வசந்தபாலன் தனது நண்பர்களுடன் இணைந்து அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத்தை துவங்கி இத்திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக மாறியுள்ளார். மேலும் இப்படத்தை அவரே இயக்கி, கதை, திரைக்கதையையும் எழுதியுள்ளார்.
இயக்குநர் வசந்தபாலனால் ’வெயில்’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தப்பட்ட ‘இசை அசுரன்’ G.V.பிரகாஷ்குமார் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். G.V.பிரகாஷ்குமார், வசந்தபாலன் கூட்டணியில் இந்தப் படத்திலும் மனதைத் தொடும் நான்கு இதமான பாடல்கள் இடம்பெற்றுள்ளன. பாடல்களை கார்த்திக் நேத்தா, ஏகாதேசி எழுதியுள்ளனர்.
மேலும், இத்திரைப்படத்தில் வனிதா விஜயகுமார், ’நாடோடிகள்’ பரணி, பிக் பாஸ் புகழ் சுரேஷ் சக்கரவர்த்தி, விஜய் டிவி புகழ் ’அறந்தாங்கி’ நிஷா, காளி வெங்கட், சாரா, அர்ஜூன் சிதம்பரம், இயக்குநர் எஸ்.கே. ஜீவா, இயக்குநர் அருண் வைத்தியநாதன், இயக்குநர் சுப்பிரமணிய சிவா மற்றும் நாட்டிய கலைஞர் பத்மஸ்ரீ சாந்தா தனஞ்செயன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். தயாரிப்பாளர் J.சதீஷ்குமார் மற்றும் அம்மா கிரியேஷன்ஸ் T.சிவா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
வெயில், அங்காடித் தெரு,அரவான், காவியத் தலைவன், ஜெயில் என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைக் களங்களில் படங்களை எழுதி இயக்கிய வசந்தபாலன் இப்படத்திலும் வித்தியாசமான கதையமைப்பை வடிவமைத்துள்ளார். வசந்த பாலன் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ள ‘அநீதி’ திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகவுள்ளது.








