’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி ’தி வேக்சின் வார்’ என்ற புதிய படத்தை இயக்குகிறார்.
1990ஆம் ஆண்டு காஷ்மீரில் இந்து மதத்தினர் மீது பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டது. லட்சக்கணக்கான இந்து பண்டிட்கள் காஷ்மீரை விட்டு வெளியேறி அண்டை மாநிலங்களில் அகதிகளாக தஞ்சமடைந்தனர். இந்த சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் `தி காஷ்மீர் ஃபைல்ஸ்’.
பாலிவுட் இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கத்தில், பிரபல பாலிவுட் நடிகர்களான அனுபம் கேர், மிதுன் சக்ரவர்த்தி, பல்லவி ஜோஷி, தர்ஷன் குமார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் உருவான இத்திரைப்படம் கடந்த மார்ச் 11ம் தேதி வெளியானது.
ஒரு பக்கம் நிஜ வரலாற்றை வெளிப்படையாக எடுத்துறைக்கிறது என்று இப்படம் பல நேர்மறை விமர்சனங்களைப் பெற்றாலும், இஸ்லாமிய வெறுப்பை தூண்டும் வகையில் கதைக்களம் அமைந்திருக்கிறது என எதிர்மறையான விமர்சனங்களையும் பெற்றது. இருப்பினும் இப்படம் அதிக வசூல் செய்து பெரும் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இத்திரைப்படத்தை இயக்கிய விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி, ’தி வேக்சின் வார்’ என்ற புதிய படத்தை இயக்குகிறார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “உங்களுக்கு தெரியாமல் இந்தியா எதிர்கொண்ட போர் பற்றியும், அறிவியல், தைரியம் மற்றும் சிறந்த மதிப்புகளால் அந்த போரில் வெற்றி பெற்றது பற்றியும் அமைந்த நம்பமுடியா உண்மை கதை இது. வரும் 2023ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று இத்திரைப்படம் 11 மொழிகளில் வெளியாகும்” என்று தெரிவித்துள்ளார். பல்லவி ஜோஷி தயாரிக்கும் இப்படத்தை ஐ ஏம் புத்தா மற்றும் அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் நிறுவனம் வழங்குகின்றன.








