ஒன்றிய அரசு மாநில அரசுகளை மதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மக்களுக்கு விசுவாசமாக இருப்பதும், மனசாட்சிப்படி நடந்து கொள்வதுமே என் வெற்றிக்கான காரணங்களாக இருக்கின்றன. மக்கள், இன்றைக்கு நான் இருக்கும் அளவிற்கு என்னை உருவாக்கி இருக்கிறார்கள். நான் அவர்களுக்கு உண்மையாக இருப்பதோடு அவர்களின் நலனுக்காகவும் உழைத்து வருகிறேன்.
மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பதே எங்களின் அடிப்படை. பெரியார், அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி காலந்தொட்டு அதுவே எங்களின் இயக்கத்தின் கொள்கை ஆகும். இந்திய அரசமைப்புச் சட்டம் மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என்று தெளிவாகவே தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசு மாநில அரசுகளை மதிக்க வேண்டும். மாநிலங்களின் கோரிக்கைகளை செவிமடுத்து கேட்க வேண்டும். அத்துடன் அவைகளை நிறைவேற்றிட வேண்டும்.
மாறாக தற்போதைய ஒன்றிய பாஜக அரசு மேற்சொன்ன எதையுமே செய்யவில்லை என்பது வருத்தத்திற்குரிய ஒன்று. மாநில அரசுகளை கலந்து ஆலோசிக்காமல், மாநில அரசுகள் தொடர்பான சட்டங்களை ஒன்றிய அரசு நிறைவேற்றி வருகிறது. இது மாற வேண்டும்.
இரண்டு மிகப் பெரிய பொறுப்புகளை தோள்களில் சுமந்து வருகிறேன். ஒன்று தமிழக முதலமைச்சர். இரண்டாவது திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர். எனது வழக்கமான ஓய்வு என்பது நடைபயணம் மேற்கொள்வதுதான்.அத்துடன் நேரம் கிடைக்கும்போதெல்லாம் யோகா செய்வேன். என் நண்பர்களும் கட்சித் தொண்டர்களும் தரும் புத்தகங்களைப் படிப்பேன். மேலும் தற்போதைய நிலவரம் தொடர்பாக மக்களின் கருத்துக்களை சமூக வலைதளங்களின் மூலம் பார்த்து தெரிந்து கொள்வேன்” என்று தெரிவித்துள்ளார்.







