“தகுதியற்றவர்கள் நிதி பெறுவதைத் தடுக்க, தவெக அரசு மிகுந்த கண்காணிப்புடன் செயல்பட வேண்டும்” – நயினார் நாகேந்திரன்!

இனிவரும் காலங்களில் தகுதியற்றவர்கள் நிதி பெறுவதைத் தடுக்க, தவெக அரசு மிகுந்த கண்காணிப்புடன் செயல்பட வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “மதுரை மாவட்டம் திருமங்கலத்தில், பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் ஒரு செங்கல் கூட நடாமல், அண்டை வீடுகளைக் காட்டி 21 லட்சம் ரூபாய் முறைகேடு செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நிலவிய ஊழல் கலாச்சாரமும், அதிகாரிகளின் மெத்தனப்போக்குமே இத்தகைய முறைகேடுகள் துணிச்சலாக நடைபெறக் காரணமாக இருந்துள்ளன. மத்திய அரசு ஏழை மக்களுக்காக வழங்கும் நிதியைச் சுரண்டுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

திமுக காலத்து இந்த ஊழல் முறைகேடுகள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், ஆட்சியில் இருக்கும் தவெக அரசு, வெறும் ‘ரீல்ஸ்’ மோகத்திலும், வெற்று விளம்பர அரசியலிலும் மட்டுமே மூழ்கிக் கிடக்காமல், நிர்வாகத்தில் போதிய கவனம் செலுத்தி, அதே தவறுகள் மீண்டும் தொடராமல் தடுக்க வேண்டும்.

மத்திய அரசின் திட்டங்கள் தகுதியுள்ள ஏழைப் பயனாளிகளுக்கு நேரடியாகச் சென்றடைவதை உறுதி செய்வதோடு, முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இனிவரும் காலங்களில் தகுதியற்றவர்கள் நிதி பெறுவதைத் தடுக்க, தவெக அரசு மிகுந்த கண்காணிப்புடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.