திருட வந்த திருடனே… திரும்பி வந்து கேட்ட மன்னிப்பு? புத்திசாலி பெண் செய்த சாதுர்யம்!

திருட வந்து திரும்பியோடிய திருடன் திரும்பவும் தானாக முன் வந்து சரணடைந்து மன்னிப்பு கேட்டிருக்கிறார்…. இந்த செயலுக்கு என்ன காரணம்… எங்க நடந்தது என்ற  சுவாரஸ்யமான சம்பவம் குறித்து இங்கே பார்க்கலாம்.  ”அம்மா நான்…

திருட வந்து திரும்பியோடிய திருடன் திரும்பவும் தானாக முன் வந்து சரணடைந்து மன்னிப்பு கேட்டிருக்கிறார்…. இந்த செயலுக்கு என்ன காரணம்… எங்க நடந்தது என்ற  சுவாரஸ்யமான சம்பவம் குறித்து இங்கே பார்க்கலாம். 

”அம்மா நான் தான் உங்க வீட்டுக்கு நேத்து திருட வந்தேன், தெரியாம பண்ணீட்டேன் மன்னிச்சுருங்க… என்னய போலீஸ் கிட்ட மட்டும் புடிச்சு குடுத்துராதீங்க” என திருட வந்த வீட்டின் உரிமையாளரிடம், சரணாகதியடைந்து மன்றாடியுள்ளார் ஒரு திருடன்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ரமேஷ்-சரண்யா தம்பதி. ரமேஷ் சிங்கப்பூரில் மெக்கானிக்கல் இன்ஜினியராக பணியாற்றி வரும் நிலையில், சரண்யா தனது மகன் மற்றும் மாமியாருடன் அவரது வீட்டில் வசித்து வருகிறார். மார்ச் 9-ம் தேதி, தனது வீட்டு இன்டர்நெட் இணைப்பு கேபிள் துண்டிக்கப்பட்டிருப்பதை கண்ட சரண்யா, ஏதேனும் வாகனங்கள் மோதி கேபிள் அறுந்திருக்கலாம் என எண்ணி இன்டர்நெட் நிறுவன ஊழியர்களை வரவழைத்து துண்டிக்கப்பட்ட இணைப்பை சரி செய்துள்ளார். அன்றிரவு உறங்கும் போது, யாரோ வீட்டினுள் ஏறி குதித்ததைப் போல் சத்தம் கேட்டதால், சரண்யா சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார். அப்போது வீட்டு காம்பவுண்டிற்குள் திருடும் நோக்கத்தில் ஒருவர் ஏறி குதித்ததை கண்ட சரண்யா அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் சுதாகரித்துக் கொண்ட அவர், தனது வீட்டிலுள்ள அனைத்து விளக்குகளையும் எரியவிட்டார். அதே போல அக்கம் பக்கத்தினரையும், செல்போனில் அழைத்து தகவல் தெரிவித்தார். இதனால் அக்கம் பக்கத்திலுள்ள வீடுகளிலும் விளக்குகள் எரியத் தொடங்க, சுவரேறி குதித்த திருடன் வந்த வழியே விட்டால் போதுமென ஓட்டம் பிடித்தார். மறுநாளும் தனது வீட்டில் பதிவான சிசிடிவி காட்சிகளை உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் என அனைவருக்கும் அனுப்பி விசாரிக்கத் தொடங்கினார் சரண்யா. அப்போது அவரது வீட்டிற்கு வந்த அடையாளம் தெரியாத நபர், சரண்யாவிடம், ”இரவு திருட வந்தது நான் தான், மன்னித்து விடுங்கள், போலீசில் மட்டும் பிடித்துக்கொடுக்க வேண்டாம்” என மன்றாடியதாக தெரிகிறது.

அதிர்ந்து போன சரண்யா உடனே அக்கம் பக்கத்தினரை வரவழைத்து, போலீசாருக்கும் தகவல் கொடுத்தார். அதனடிப்படையில் அங்கு சென்ற சத்தியமங்கலம் போலீசார், அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சூரிபள்ளம் பகுதியைச் சேர்ந்த பிரபு என்பதும், செண்டிரிங் தொழிலாளியான அவர், பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளை குறி வைத்து திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. அத்துடன் சரண்யாவின் வீட்டிலுள்ள இன்டர்நெட் கேபிளை துண்டித்துவிட்டால், சிசிடிவியில் சிக்காமல் திருடிச் சென்றுவிடலாம் என திட்டம் தீட்டி கேபிளை துண்டித்ததாகவும் அவர் போலீசாரிடம் தெரிவித்தார். ஆனால் சரண்யா தான் வந்த சிசிடிவி பதிவுகளை பகிர்ந்து விசாரிப்பதை அறிந்து, எப்படியும் சிக்கிக்கொள்வோம் என்று எண்ணி, சரண்யாவை தேடி வந்து கெஞ்சியதாகவும் வாக்குமூலம் அளித்தார்.

பின்னர் பிரபு எந்த வழியில் வந்து வீட்டில் திருட முற்பட்டார் என்பதை நடித்து காண்பிக்கக் கூறிய போலீசார், அதையும் வீடியோ பதிவு செய்தனர். திருட வந்ததை ஒப்புக்கொண்ட பிரபு மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்ததுடன், அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், பிரபுவின் திருட்டுத் தொழில் கூட்டாளியான வடவள்ளி பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். பெண்ணின் புத்திசாலித்தனத்தால் திருட்டு முயற்சி தடுக்கப்பட்ட நிலையில், சிசிடிவியில் சிக்கியதால் அஞ்சி திருடனே வந்து சரண்டரான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பேசுபொருளாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.