தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பல்வேறு மாவட்டங்களில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சந்திப்பு கூட்டங்களை நடத்தி வருகிறார். இந்த நிலையில் விஜய் பங்கேற்கும் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் தஞ்சை அருகே அய்யாச்சாமிபட்டி பிரிவு சாலை பகுதியில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தவெக தலைவா் விஜய் சென்னையில் இருந்து தனி விமானத்தில் திருச்சி வந்த நிலையில் திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்க்கு வந்தார். அப்போது அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சந்திப்பு நிகழ்ச்சி தொடங்கியது.
இந்த கூட்டத்தில் 4,900 நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். அவர்களுக்கு கியூ.ஆர்.கோடுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. வெயில் காரணமாக மேற்கூரை மற்றும் அமர்வதற்கு வசதியாக நாற்காலி வசதி செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு குடிநீர் வசதி, மருத்துவ வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர தவெக சார்பில் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். விஜய்யை பார்க்க ஏராளமான தொண்டர்கள், பொதுமக்கள் வருவார்கள் என்பதால் ஏராளமான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
போலீஸ் பாதுகாப்பை மீறி தொண்டர்கள் நிகழ்ச்சிக்கு செல்வதை தடுக்கும் வகையில் 3 அடுக்குகளாக தகர ஷீட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. பெண்கள், கர்ப்பிணிகள், வயது முதிர்ந்தவர்கள் மற்றும் உடல்நிலை சரியில்லாதவர்கள் கூட்டத்திற்கு வர வேண்டாம். வீட்டில் இருந்தபடி தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் நேரலையாக காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்கு 52 நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.







