லேண்டரை மீண்டும் மேலே எழுப்பிய சோதனை வெற்றி : இஸ்ரோ அறிவிப்பு!

சந்திரயான் – 3 லேண்டரை மீண்டும் மேலே எழுப்பிய சோதனை வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. சந்திரயான் – 3 விண்கலத்தை சுமந்தபடி, எல்.வி.எம்., 3 – எம்4 ராக்கெட் ஜூலை 14 ஆம்…

சந்திரயான் – 3 லேண்டரை மீண்டும் மேலே எழுப்பிய சோதனை வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

சந்திரயான் – 3 விண்கலத்தை சுமந்தபடி, எல்.வி.எம்., 3 – எம்4 ராக்கெட் ஜூலை 14 ஆம் தேதி பிற்பகல் 2:35 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. சில நிமிடங்களில் ராக்கெட்டில் இருந்து சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக பிரிந்து, புவி சுற்றுவட்டாரப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது

இதனைத்தொடரந்து ஆகஸ்ட் 23ம் தேதி, சந்திரயான்-3, வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தை அடைந்தது. சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து விக்ரம் எனும் லேண்டர் சாதனமும், பிரக்யான் எனும் ரோவர் சாதனமும் பிரிந்து நிலவை அடைந்து, ஆய்வு பணிகளை சிறப்பாக செய்து வருவதாக இஸ்ரோ தெரிவித்தது.

விக்ரம் லேண்டா் தரையிறங்கிய இடத்தில் இருந்து 500 மீ. சுற்றளவில் வலம் வரத் திட்டமிட்டுள்ள பிரக்யான் ரோவா், நிலவில் மண், கற்கள், தன்மை, தனிமங்கள், வேதிக்கலவை போன்றவற்றை ஆய்வுக்கு உள்படுத்தி வருகிறது

இந்த நிலையில், சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டரை 40 செ.மீ உயர்த்தி, 30-40 செ.மீ. தொலைவில் மீண்டும் பாதுகாப்பாக இஸ்ரோ தரையிறக்கியது. மேலும், நிலவின் தென் பகுதியில் உள்ள லேண்டரின் அனைத்து கருவிகளும் சரியாக உள்ளன என்றும், இந்த செயல்பாடு வருங்காலத்தில் விண்வெளி வீரர்களை நிலவில் தரையிறங்கும் திட்டத்துக்கு முன்மாதிரியாக இருக்கும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.