தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்களை வழங்குவதற்கு ஏதுவாகவே மக்கள் ஐடி கொண்டுவரப்பட இருப்பதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் ஆதார் அட்டையை போன்று தமிழ்நாடு அரசு மக்கள் ஐடி எனும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது. இதனிடையே பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் ஆகியோர் இத்திட்டத்திற்கு கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ், ஒவ்வொரு குடும்பங்களின் பொருளாதார நிலை குறித்து அறிந்து கொள்வதற்கு ஏதுவாகவும், மக்கள் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதற்கு வசதியாகவுமே மக்கள் ஐடி கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு போட்டி இல்லை என்று தெரிவித்த அவர், தமிழ்நாடு வளர்ச்சி அடைந்தால் நாடு வளர்ச்சி அடைந்தது போன்று தான் என்றார். மேலும் இ-சேவை 2.0 திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள இ-சேவை மையங்கள் மேம்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.







