வருமான வரி சோதனைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி விளக்கம்!

தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வரும் நிலையில், சோதனைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடியை தலைநகரமாகக் கொண்டு இந்தியா…

தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வரும் நிலையில், சோதனைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடியை தலைநகரமாகக் கொண்டு இந்தியா முழுவதும் 21 மாநிலங்களில் 546 கிளைகளைக் கொண்ட தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி விஇ சாலையில் உள்ள வங்கி தலைமை அலுவலகம் மற்றும் தலைமை இணைப்பு அலுவலகம் ஆகிய இரண்டு அலுவலகங்களிலும் மதுரை, திருச்சி, சேலம், கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்து பத்துக்கும் மேற்பட்ட வருமான வரித் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சோதனை எதற்காக நடைபெறுகின்றது என்று உறுதியான தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.

இந்த நிலையில், சோதனைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக வங்கி நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளது. அதில் தூத்துக்குடியை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் மத்திய வருமான வரித்துறை ஆணையரகத்தின் நுண்ணறிவு மற்றும் குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனையின்போது அதிகாரிகளுக்கு வங்கி தரப்பில் முழு ஒத்துழைப்பு அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களின் கேள்விகளுக்கு முறையாக பதில் அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வருமான வரித்துறை சோதனையால் வங்கி சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் வழக்கம்போல வங்கியின் வணிக சேவைகள் தொடர்ந்து நடைபெற்றதாக தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி தெரிவித்துள்ளது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.