அரிக்கொம்பன் யானை தற்போது எந்த இடத்தில் உள்ளது, அதன் நிலவரம் என்ன என்பதை தெரிவிக்க உத்தரவிடக்கோரிய மனுதாரருக்கு உச்சநீதிமன்றம் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது.
இடுக்கி மாவட்டத்தில் கிராமங்களுக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்திய அரிக்கொம்பன் யானையை கண்டறியக்கோரியும், அந்த யானை எங்குள்ளது , உயிரோடு உள்ளதா அல்லது இறந்து விட்டதா ? என்ற விவரத்தை அறியக்கோரி வாக்கிங் ஐ பவுண்டேஷன் என்ற அமைப்பு உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தது
இந்த மனு தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அரிக்கொம்பன் யானை விவகாரத்தில் தொடச்சியாக தாக்கல் செய்யப்படும் பொதுநல மனுக்களால் நாங்கள் சோர்வடைந்து விட்டோம் என அதிருப்தி தெரிவித்தனர்.
மேலும் அரிக்கொம்பன் யானை எங்குள்ளது என்பதை எதற்காக அறிந்து கொள்ள விரும்புகிறீர்கள் ? வனவிலங்குகள் எங்கே உள்ளன என்பதை நீங்கள் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும் ? என்று வினவினர்.
மேலும் கடுமையாக நடந்துகொள்ளாமல் இருப்பதால் இந்த நீதிமன்றத்தை அவரவர் விருப்பப்படி நடத்தலாம் என்று எண்ண வேண்டாம் என தெரிவித்து மனுவை தாக்கல் செய்த மனுதாரரருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபரதம் விதிப்பதாக உத்தரவிட்டதோடு, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.








