முல்லை பெரியாறு தொடர்புடைய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

முல்லை பெரியாறு அணையில் ஆண்டு முழுவதும் 142 அடி வரை நீரை தேக்க உத்தரவிடக் கோரி சிவகங்கையைச் சேர்ந்த நாராயணன் என்பவரது மனு வாபஸ் பெற்றதையடுத்து அந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. செப்டம்பர்…

முல்லை பெரியாறு அணையில் ஆண்டு முழுவதும் 142 அடி வரை நீரை தேக்க உத்தரவிடக் கோரி சிவகங்கையைச் சேர்ந்த நாராயணன் என்பவரது மனு வாபஸ் பெற்றதையடுத்து அந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

செப்டம்பர் மற்றும் அக்டோபர் ஆகிய மாதங்களில் பாசனத்திற்கு போதிய நீர் கிடைக்கவில்லை. முல்லை பெரியாறு அணையில் முழு கொள்ளளவு எட்டும் வரை நீரை தேக்கினால் தேவைப்படும் சமயத்தில் விவசாயிகளுக்கு உதவும்.

ஆனால், உச்சநீதிமன்ற உத்தரவு அடிப்படையில் 142 அடி வரை நீரை தேக்க கேரள அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை. எனவே இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட்டு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.

குறிப்பாக ஆண்டு முழுவதும் முல்லை பெரியாறு அணையில் 142 அடி வரை நீர் சேமிக்கப்படுவதை காவிரி ஆணையம் உறுதி செய்ய வேண்டும் எனவும் கோரி சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த விவசாயி நாராயணன் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சந்திர சூட் மற்றும் ஹிமா கோலி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இது போன்ற உத்தரவுகளை கோர உங்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், “இதுதொடர்பாக கோரிக்கைகள் தேவைப்பட்டால் தமிழ்நாடு அரசிடமோ அல்லது நிவாரணம் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தையோ நாடுங்கள்” என அறிவுறுத்தினர்.

இதனையடுத்து மனுதாரர் தரப்பில் வழக்கை திரும்பப் பெறுவதாக கூறியதை ஏற்று அனுமதியளித்த நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.