சின்னத்திரை நடிகை சித்ராவின் உயிரிழப்பு வழக்கு, மீண்டும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது.
தனியார் தொலைக்காட்சி தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து தமிழ்நாடு முழுவதும் புகழ்பெற்றவர் சித்ரா. 2020-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், சென்னையில் விடுதி அறையில் தங்கியிருந்த அவர் சடலமாக மீட்கப்பட்டார். அவரது உயிரிழப்பு திரைபிரபலங்கள் மட்டுமின்றி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
சித்ராவின் கணவர் ஹேம்நாத் கொடுத்த தொல்லையால்தான், சித்ராஉயிரிழப்புக்கு தூண்டப்பட்டதாக அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஹேம்நாத் பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஹேம்நாத் புகார் ஒன்றை வழங்கினார். அதில், சித்ராவின் மரணத்திற்கு காரணமாக பண பலமும், அரசியல் பலமும் கொண்ட நபர்கள் இருப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருந்தார். அவர்களிடமிருந்து பணம் பறிக்க சிலர் முயற்சிப்பதாகவும், அதற்கு ஒத்துழைப்பு வழங்கவில்லையெனில் தன்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டுவதாகவும் குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம், சித்ராவின் உயிரிழப்பு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, பேசிய முன்னாள் அமைச்சர், மடியில் கணம் உள்ளவர்களுக்கே பயம் இருக்கும் என தெரிவித்தார். ஏறக்குறைய சித்ராவின் மரணத்தை அனைவரும் மறந்தேவிட்ட இந்த சூழலில்தான், தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சித்ராவின் மரணம், ஹேம்நாத்தின் புகாரால் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








