வேலூர் மாவட்டத்தில் அதிகரிக்கும் வெயிலின் தாக்கம் காரணமாக மாவட்ட ஆட்சியர் புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் வெயிலின் தாக்கல் நாளுக்குள் நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் வேலூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக சராசரியாக 102 டிகிரிக்கும் அதிகமான வெப்ப நிலை பதிவாகி வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் பல்வேறு பாதிப்புகளுக்கும் ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில் நாளை முதல் அக்னி நட்சத்திரம் தொடங்க உள்ளதால் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன்படி மாவட்டம் முழுவதும் காலை 11 மணி முதல் 3 மணி வரை முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் உள்ளிட்டோர் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். வெளியே செல்பவர்கள் கையில் குடை, தண்ணீர் பாட்டில் உள்ளிட்டவற்றை கொண்டு செல்லுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
இதற்குமுன்னதாக மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மாநில அரசுகளுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். அதில், மே மாதத்தில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், வெயிலின் பாதிப்புகளை தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மத்திய சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ள அவர், வெயிலின் பாதிப்புகளால் பொதுமக்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
அதேபோல, நோய் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் எனவும், வெப்பத்தால் பாதிக்கப்படும் நோயாளிகளை தினசரி கண்காணிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், கடந்த சில வாரங்களாக வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் வழக்கத்திற்கு மாறான வெப்பநிலை பதிவாகியுள்ளதாகவும், இது கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கான வெப்பநிலை எனகுறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.