தமிழக மாணவர்கள் இனி ஜேஇஇ பொதுத் தேர்வை தமிழ் மொழியில் எழுதலாம் எனத் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் திருச்சி NIT இயக்குநர் அகிலா தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே நீலக்குடியில் உள்ள தமிழ்நாடு மத்தியப்
பல்கலைக்கழகத்தில் சர்வதே “மகளிர் தினம்” கொண்டாடப்பட்டது. பல்கலைக்கழகத் துணைவேந்தர் கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், திருச்சி NIT இயக்குனர் அகிலா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
பெண்கள் சமூகத்தில் எவ்வாறுப் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது குறித்தும்,
அதற்கான வழிமுறைகள் குறித்தும் அவர் பேசினார். மேலும், வலைதளம், இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலமாகப் பெண்கள் எவ்வாறு சமூக விரோதிகளிடம் அகப்பட்டு கொள்கிறார்கள் என்பது குறித்தும், அதிலிருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்தும் பேசினார்.
முன்னதாகப் பேசிய பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் திருவாரூர், மத்திய
பல்கலைக்கழகம் பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும், வருடம் தோறும்
இங்கு பயிலக்கூடிய மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் கூறினார். மேலும் கிராமப்புற மாணவிகள் இணையத்தைப் பயன்படுத்தி திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் எவ்வாறு சேர்வது என்பது குறித்தும் அவர் பேசினார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த NIT இயக்குநர் அகிலா, திருச்சி NIT-யில் கிராமப்புற மாணவர்களுக்கு JEE, NEET குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும் , மேலும், NIT மாணவர்கள் திருச்சிப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களை தேர்வு செய்து NEET போன்ற பொதுத் தேர்வு எழுதுவதற்கான பயிற்சி அளிக்கின்றனர் எனவும் அவர் கூறினார்.
மேலும், JEE தேர்வு எழுதும் போது தமிழ் மொழியைத் தேர்ந்தெடுத்துத் தேர்வு எழுதலாம் எனவும், டிஜிட்டல் டெக்னாலஜி மூலம் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் பேட்டி அளித்துள்ளார். இந்த நிகழ்வில் பல்கலைக்கழக மாணவ மாணவியர்கள், பேராசிரியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
ரெ.வீரம்மாதேவி
TVR JEE EXAM TAMIL LANGUAGE 07.03.23







