தெற்கு கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பிரபல பின்னணிப் பாடகர் கே.கே. என்கிற கிருஷ்ணகுமார் குன்னத் (53) கலந்துகொண்டு சுமார் ஒரு மணி நேரம் பாடல்களைப் பாடினார். நிகழ்ச்சி முடிந்த பிறகு அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு திரும்பியபோது திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் கேகே ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கே.கே.வின் அறியப்படாத பக்கங்கள்…
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சி.எஸ்.நாயர், கனகவள்ளி தம்பதிக்கு 1968ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி பிறந்தார் கிருஷ்ணகுமார் குன்னத். மலையாள குடும்பத்தில் பிறந்த கே.கே. டெல்லியில் வசித்து வந்தார். ஆரம்பகட்டத்தில் டாக்டராக வேண்டும் என்பதே இவருடைய கனவாக இருந்தது. தன் ரசிகர்களுக்காக பல்வேறு காதல் பாடல்களைப் பாடியுள்ள கேகே தன்னுடைய வாழ்விலும் ஒரு ரொமாண்டிக் ஹீரோவாகத்தான் வாழ்ந்து வந்தார். கேகே தான் 10ஆம் வகுப்பு படிக்கும்போதே காதலில் விழுந்துள்ளார். காதலித்த பெண்ணையே திருமணம் செய்துகொள்ள முடிவு செய்த கேகே, அந்த முடிவில் மிகவும் உறுதியாக இருந்து அதே பெண்ணை 1991ஆம் ஆண்டு திருமணமும் செய்துகொண்டார். அந்தப் பெண் தான் ஜோதி கிருஷ்ணா. கேகே, ஜோதி தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.
1994இல் தனது இசைப் பயணத்தைத் தொடர்வதற்காக மும்பை செல்வதற்கு முன்பு கே.கே. ஹோட்டல் துறையில் பணியாற்றியுள்ளார். தன்னுடைய கனவை நிறைவேற்றுவதில் மிகவும் உறுதுணையாக இருந்தவர் என்னுடைய மனைவி ஜோதிதான் என கேகே பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
திரைத்துறைக்கு வருவதற்கு முன்பாக 3,500க்கும் மேற்பட்ட ஜிங்கில்ஸ் எனும் விளம்பரப் பாடல்களைப் பாடியுள்ளார் கேகே. டெல்லியில் ஒருமுறை நிகழ்ச்சி ஒன்றில் பாடிக் கொண்டிருந்த கே.கே.வை பார்த்த மூத்த பாடகர் ஹரிஹரன் அவரது திறமையைப் பாராட்டி மும்பைக்குச் செல்ல ஊக்குவித்துள்ளார்.
கேகேவின் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் கிஷோர் குமார். அவருடைய பாடல்களால் பெரிதும் ஈர்க்கப்பட்ட கேகே இசையின் மீது மிகுந்த காதல்கொண்டவரானார். முறையாக இசையைக் கற்றுக்கொள்ளாத கேகே, பாடல்களைக் கேட்டு மட்டுமே பாட கற்றுக் கொண்டுள்ளார். பாடல் வரிகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கும் இவர், பாடல் வரிகள் நன்றாக இருந்தால் மட்டுமே அந்தப் பாடல்களைப் பாட ஒப்புக்கொள்வார். வரிகள் மூலம் மட்டுமே உணர்வுகளை சரியாகக் கடத்த முடியும் என்பதில் மிகவும் நம்பிக்கை கொண்டவர். பாடல் வரிகள் பிடிக்கவில்லை என்றால் அந்தப் பாடல்களைப் பாட இவர் ஒப்புக் கொள்வதில்லை. அதேபோல, நிறைய வாய்ப்புகளையும் இவர் மறுத்துள்ளார். ஒருமுறை திருமண நிகழ்ச்சியில் பாடுவதற்காக 1 கோடி ரூபாய் தருவதாகக் கூறியும் அவர் பாட மறுத்துவிட்டார். திரைத்துறையில் நடிக்க அழைத்தபோதும் அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார்.
கேகே தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், மராத்தி, வங்காளம் உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார். இவரது திறமையைக் கண்டறிந்த ஏ.ஆர்.ரகுமான் காதல் தேசம் படத்தில் இரண்டு பாடல்களுக்கான வாய்ப்பை வழங்கினார்.1999ஆம் ஆண்டு கிரிக்கெட் உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்காக கே.கே. பாடல் பாடியுள்ளார். 90களின் காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பாடகாராக வலம் வந்தவர் கே.கே.
1997 முதல் தற்போது வெளியாகியுள்ள லெஜண்ட் படத்தின் பாடல்கள் வரை தமிழ் திரையுலகில் மிகப்பெரிய பங்காற்றியவர் கே.கே. 90களில் இளைஞர்களின் ரிங் டோனாக இருந்த பாடல்களில் பெரும்பாலானவை கே.கே.வுடையது என்று கூறினால் மிகையாகாது. இளமைக் காலங்களை மிகவும் அழகாக்கியவை கே.கே.வின் பாடல்கள். இந்தப் பாடல்களுக்கெல்லாம் சொந்தக்காரர் இவர்தானா என ஆச்சரியப்படும் அளவுக்கு தமிழில் 50க்கும் மேற்பட்ட ஹிட் பாடல்களை கே.கே. பாடியுள்ளார்.
இளைஞர்களின் ஃபேவரட் பாடகரான கே.கே.வின் டாப் 20 தமிழ் பாடல்கள் லிஸ்ட் இதோ…..
- பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது – உயிரோடு உயிராக
- ஸ்ட்ராபெர்ரி கண்ணே – மின்சார கனவு
- காதலிக்கும் ஆசையில்லை கண்கள் உன்னை காணும் வரை – செல்லமே
- உயிரின் உயிரே – செல்லமே
- என் காதல் சரியோ தவறோ- குட்டி
- காதல் ஒரு தனிக்கட்சி – ஷாஜகான்
- ஒரு புன்னகைப் பூவே – 12பி
- லேலக்கு லேலக்கு லேலா – ஆதி
- நினைத்து நினைத்துப் பார்த்தேன் – 7ஜி ரெயின்போ காலனி
- பட்டாம்பூச்சி கூப்பிடும்போது – காவலன்
- அண்டங்காக்கா கொண்டக்காரி – அந்நியன்
- நீயே நீயே நானே நீயே – எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி
- அப்படிப்போடு போடு – கில்லி
- வார்த்தை ஒன்னு வார்த்தை ஒன்னு – தாமிரபரணி
- காதல் வளர்த்தேன் – மன்மதன்
- நிஜமா நிஜமா – போஸ்
- ஒரு வார்த்தை கேட்க ஒரு வருஷம் – ஐயா
- என் வெண்ணிலவே – ஆடுகளம்
- கல்யாணம்தான் கட்டிக்கிட்டு – சாமி
- பனித்துளி பனித்துளி – கண்டநாள் முதல்
2018ஆம் ஆண்டு கேகே அளித்த பேட்டி ஒன்றில், மீடியா முன்பு தோன்றுவதற்கு மிகவும் கூச்சப்படும் நபர் நான். என்னுடைய புகைப்படங்களைக் கூட எந்த மீடியாவிலும் நீங்கள் பார்க்க முடியாது. அதனாலேயே மக்களுக்கும் நான் யார் எனத் தெரியாமல் போய்விட்டது என்று நினைக்கிறேன். நிறைய நிகழ்ச்சியில் பாடி முடித்த பின்னர் ரசிகர்கள் என்னிடம் வந்து கேட்பார்கள் நீங்கள்தான் உண்மையிலேயே கே.கே.வா என்று. ஏனெனில் அவர்கள் என்னை அவ்வளவாகப் பார்த்ததில்லை அதுதான் காரணம் என்று கூறியிருந்தார்.
நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியின்போது ரசிகர்களின் ஆரவாரங்களைப் பார்த்து பூரித்துப் போயிருந்த கே.கே. மக்களின் ஆதரவு குறித்து சிலாகித்துப் பேசியிருந்தார். ஆனால், அவருடைய மகிழ்ச்சி 24 மணி நேரம் கூட நீடிக்கவில்லை.
-ம.பவித்ரா