பாடப்புத்தகங்களில் இந்திய மன்னர்கள் வரலாறு – அரசுக்கு அக்ஷய் குமார் வேண்டுகோள்

பாடப்புத்தகங்களில் இந்திய மன்னர்களின் வரலாறு இடம்பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் கோரிக்கை விடுத்துள்ளார். அக்ஷய் குமார் நடித்த ‘சாம்ராட் பிரித்விராஜ்’ படம் நாளை…

பாடப்புத்தகங்களில் இந்திய மன்னர்களின் வரலாறு இடம்பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

அக்ஷய் குமார் நடித்த ‘சாம்ராட் பிரித்விராஜ்’ படம் நாளை மறுநாள் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில், குஜராத்தின் சோம்நாத் கோயிலுக்குச் சென்று படம் வெற்றி பெற பிரார்த்தனை மேற்கொண்ட அக்ஷய் குமார், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, இந்திய மன்னர்களான பிரித்விராஜ், மகாரானா பிரதாப் உள்ளிட்டோர் குறித்த வரலாறு பாடப்புத்தகங்களில் இடம்பெற மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுப்பதாகக் குறிப்பிட்டார்.

இந்திய மன்னர்களின் வரலாறு குறித்து யாரும் எழுதுவதில்லை என வருத்தம் தெரிவித்த அக்ஷய் குமார், எனவே தனது வேண்டுகோள் குறித்து தர்மேந்திர பிரதான் பரிசீலிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

முகலாய மன்னர்களின் வரலாறுகள் பாடப்புத்தகங்களில் இருக்கக் கூடாது என்பது தனது வாதம் அல்ல என தெரிவித்த அக்ஷய் குமார், அதேநேரத்தில் இந்திய மன்னர்களின் வரலாறு இடம்பெற வேண்டும் என்பதே தனது வாதம் என குறிப்பிட்டார். ஏனெனில், அவர்களும் சிறந்து விளங்கியவர்கள்தான் என்று அக்ஷய் தெரிவித்தார்.

அக்ஷய் குமார் நடித்துள்ள சாம்ராட் பிரித்விராஜ் படம்12ம் நூற்றாண்டில் வாழ்ந்த ரஜபுத்ர மன்னர் பிரித்விராஜ் சவுகானைப் பற்றியது. இந்த படத்தில் அக்ஷய் குமார் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த 2017ல் உலக அழகி பட்டம் வென்ற மனுஷி சில்லார், பிரித்விராஜ் சவுகானின் மனைவி சன்யோகிதாவாக நடித்துள்ளார். இந்த படத்தை சந்திரபிரகாஷ் திவேதி இயக்கி உள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.