வட மாநிலங்களில் இருந்து வரும் மாணவர்கள்தான் தமிழ்நாட்டில் கொரோனா தொற்றை பரப்பி வருவதாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்த கருத்துக்கு பாஜக-வைச் சேர்ந்த உத்தரப்பிரதேச அமைச்சர் ஜிதின் பிரசாதா கண்டனம் தெரிவித்துள்ளார்.
யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் இறப்பு இல்லாத நிலை தொடர்வதாகத் தெரிவித்தார்.
அதேநேரத்தில், தமிழ்நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் கொரோனா தொற்று உயர தொடங்கியதற்குக் காரணம், இந்தியாவின் வட மாநிலங்களில் தொற்று கட்டுக்குள் வராமல் இருப்பதும், அங்கிருந்து மாணவர்கள் இங்கு வருவதுமே என்று அவர் கூறினார்.
தமிழ்நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தற்போது குணமடைந்து வருவதாகவும், சென்னை IIT, சத்யசாய் ஆகிய உயர்கல்வி நிறுவனங்களில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை பூஜ்ஜியமாக இருப்பதாகவும் தெரிவித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், அதேநேரத்தில், அண்ணா
பல்கலைக்கழகத்தில் தொற்று எண்ணிக்கை 23 ஆகவும், VIT உயர்கல்வி நிறுவனத்தில் தொற்று எண்ணிக்கை 45 ஆகவும் இருப்பதாகவும்க் கூறினார்.
அமைச்சரின் இந்த பேச்சுக்கு உத்தரப்பிரதேச அமைச்சர் ஜிதின் பிரசாதா கண்டனம் தெரிவித்துள்ளார். கொரோனா பெருந்தொற்றுக்கு எல்லைகள் கிடையாது என்றும், மாநிலத்தின் அமைச்சர் ஒருவரே இவ்வாறு பேசியிருப்பது பொறுப்பற்றது, இழிவானது என்றும் கண்டித்துள்ளார். அமைச்சரின் இந்த பேச்சு வட மாநிலத்தவர்களை புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.










