முக்கியச் செய்திகள் கதைகளின் கதை தமிழகம்

கொடிகாத்த திருப்பூர் குமரனின் கதை!

இந்திய சுதந்திர போராட்டத்தில் தனது உயிர் பிரியும் போது தேசிய கொடியை விடாமல் பிடித்துக்கொண்டே உயிர் நீத்த சுதந்திர போராட்ட வீரர் கொடிகாத்த திருப்பூர் குமரனின் வாழ்க்கை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

இளமையின் இனிமையை பாதியளவு கூட அனுபவிக்காமல், தன்னுடைய இருபத்தியெட்டு வயதிலேயே நாட்டின் விடுதலை வேள்வியில், தன் உயிரையே விலையாகக் கொடுத்தவர் தான் திருப்பூர் குமரன். 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இவ்வேளையில் ஒரு சிறு நினைவூட்டல் பதிவு இங்கே. ஈரோடு மாவட்டம், சென்னிமலையின், செ.மேலப்பாளையம் எனும் சிற்றூரில் நெசவாளரான நாச்சிமுத்து- கருப்பாயி தம்பதியரின் மகனாக குமரன் பிறந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நெசவுத் தொழிலில் போதிய வருமானம் இல்லாததால், அங்கிருந்து திருப்பூருக்கு இடம் மாறியது குமரன் குடும்பம். 1923ம் ஆண்டு ராமாயி என்பவரை மணம் முடித்தார் குமரன். தேச பக்திப் பாடல்களை பாடியபடி, திருப்பூர் தேசபந்து இளைஞர் மன்றத்தை நிர்வகித்தபடி இருந்ததால், பிரிட்டிஷ் அரசாங்க போலீசாரால் ‘கவனிக்கும்’ லிஸ்ட்டில் வைக்கப்பட்டார்.

1932ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி அன்று தேச விடுதலைப் போராளிகள், மாபெரும் அறப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதனை அறிந்த பிரிட்டிஷ் போலீசார், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா முழுவதிலும் கைது நடவடிக்கையை மேற்கொண்டு வந்தனர். தமிழகத்தின் திருப்பூரில், போராட்டத்தை தலைமை தாங்கி நடத்திச் செல்ல செல்வந்தர் பி.டி.ஆஷர், அவர் மனைவி பத்மாவதி ஆஷர் முன்வருவர் என அறிந்த ஆங்கிலேயர்கள், அவர்களையும் கைது செய்தனர்.

எனினும், போராட்டம் நடத்துவதில் உறுதியாக இருந்த போராட்டக்காரர்கள், ஊர் பெரியவர் பி.எஸ்.சுந்தரம் தலைமை தாங்க, திருப்பூர் குமரன், ராமன் நாயர், நாச்சிமுத்து கவுண்டர், பெங்காளி முதலியார், நாச்சிமுத்து செட்டியார், சுப்புராயன், இன்டர் மீடியட் மாணவர்கள் அப்புக்குட்டி, நாராயணன் ஆகியோர் முன்னணியில் கொடிகளுடன் எழுப்பிய முழக்கம் ஊர்வலம் தொடங்கிய இடத்திலேயே அதிர வைத்தது.

இதனை கண்ட போலீசார், ஒவ்வொரு போராட்ட வீரர்களாய் தனித்தனியே பிடித்திழுத்து அவர்களது பூட்ஸ்களால் மிதிக்கத் தொடங்கினர். ஓவ்வொருவராக ஆங்கிலேயரின் பூட்ஸ்களின் மிதிகளில் நசுங்கி கோமா நிலைக்கு செல்ல செல்ல, ஒருவரின் கையில் மட்டும் நமது தேசிய கொடி வானத்தை பார்த்தபடி வீசியது. அது தான் திருப்பூர் குமரன். வந்தே மாதரம் என்ற வார்த்தையை இறுதி மூச்சு வரை ஒலித்து கொண்டிருந்த அவர், ஆங்கிலேயரின் அத்தனை துயரங்களை தாண்டி கையில் கொடியை ஏந்தி கொண்டிருந்தார்.

வலியால் துடித்து கொண்டிருந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். திருப்பூர் குமரனோ சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். இதனாலே அவர் கொடி காத்த குமரன் என அனைவராலும் போற்றப்படுகிறார்.இவரின் தியாகத்தை போற்றும் வகையில், இந்திய அரசு 1957ஆம் ஆண்டு திருப்பூர் ரயில் நிலையம் அருகே அவரது நினைவு சிலையை அமைத்தது. அதன் பின்னர் 1991 ஆம் ஆண்டு தமிழக அரசு ரயில் நிலையம் அருகே அவருக்கு நினைவு மண்டபம் அமைத்து பெருமைப்படுத்தியது.

மேலும் அவருடைய பிறந்த நாளை தமிழக அரசு, அரசு விழாவாக நடத்தி வருகிறது. மேலும் அவர் பிரிட்டிஷாரால் அடிபட்டு உயர்நீத்த இடத்தில் நினைவு ஸ்தூபியும் அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் குமரனின் தியாகத்தால் இன்றும் த ங்கள் குடும்பம் பெருமைப்பட்டு வருவதாகவும், மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து திருப்பூர் குமரனின் பெருமையை பறைசாற்றும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவது பெருமை அளிப்பதாகவும் திருப்பூர் குமரனின் கொள்ளுப்பேரன் நிர்மல் தெரிவித்துள்ளார்.

  • திருப்பூர் ச. கதிர்வேல்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“காமராசர் பல்கலைக்கழக விவகாரம்; 10% இட ஒதுக்கீட்டைத் திரும்பப் பெறுக”

Arivazhagan Chinnasamy

5 வயதுக்கு உட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ரெடியா?

G SaravanaKumar

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு

G SaravanaKumar