“அரசு விழாக்களில் மாநிலப் பாடலே முதலில் பாட வேண்டும்” – மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு!

அரசு விழாக்களில் மாநிலப் பாடலே முதலில் பாடப்பட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் மாநிலப் பாடல்களை இசைக்க வேண்டும் என்றும், அதைத் தொடர்ந்து தேசியப் பாடல் (வந்தே மாதரம்) மற்றும் தேசிய கீதம் (ஜன கண மன) ஆகியவற்றை இசைக்க வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் புதிய வழிகாட்டுதல்களைப் பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேச நிர்வாகங்கள் மற்றும் மத்திய அமைச்சகங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. அதன்படி,

“சில மாநிலங்களில் தேசிய கீதம்/தேசியப் பாடலுடன் மாநிலப் பாடலும் இசைக்கப்படுகிறது. இனி இத்தகைய நிகழ்ச்சிகளில், முதலில் மாநிலப் பாடல் இசைக்கப்பட வேண்டும். அதைத் தொடர்ந்து தேசியப் பாடலும், இறுதியாக தேசிய கீதமும் இசைக்கப்பட வேண்டும்.

தேசியப் பாடலும், தேசிய கீதமும் பாடப்படும்போது, அவற்றுக்குரிய சரியான வரிகள், உச்சரிப்பு மற்றும் இசைக்கப்படும் விதம் குறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள விதிமுறைகளைத் துல்லியமாகப் பின்பற்ற வேண்டும்.

தேசிய கீதம் மற்றும் தேசியப் பாடல் இசைக்கப்பட வேண்டிய மற்றும் பாடப்பட வேண்டிய தருணங்கள் குறித்த விரிவான வழிகாட்டுதல்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. அவற்றை அனைத்து நிறுவனங்களும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்” என்று அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.