அதிமுகவில் ஒற்றை தலைமையை தேர்ந்தெடுக்க வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்திய நிலையில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனிதனியாக ஆலோசனை நடத்தினர்.
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் ஒற்றை தலைமை தேவை என பெரும்பாலான உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, இன்று சென்னை பசுமை வழி சாலையில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில், அதிமுகவின் அமைப்புச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான மனோஜ் கே பாண்டியன் , முன்னாள் அமைச்சர்கள் காமராஜ் மற்றும் ஆர். பி உதயகுமார் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். மேலும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் மற்றும் அதிமுக அமைப்பு செயலாளரும் ஓ பன்னீர் செல்வத்தின் ஆதரவாளராக அறியப்படும் ஜே சி டி பிரபாகர், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஆகியோரும் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதேபோல், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை, முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். ஒற்றை தலைமை விவகாரம் தீவிரமாக ஆலோசிக்கப்படுவதால், இந்த விவகாரம் வரும் 23-ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுவிலும் விவாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
அதேநேரத்தில், சென்னை உட்பட பல்வேறு இடங்களில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக நிர்வாகிகள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளன. அவ்வாறு ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் பல இடங்களில் கிழிக்கப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சென்னை கிரீன்வேஸ் சாலையில் ஓ.பன்னீர்செல்வம் இல்ல முன்பாக கூடியிருந்த அவருடைய ஆதரவாளர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதேபேல் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக ஒற்றை தலைமையை ஏற்க இருக்கும் எடப்பாடியாரை வரவேற்கிறோம் என்ற வாசகங்கள் அதில் குறிப்பிட்டிருந்தன. சில இடங்களில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகவும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்ததால் தொண்டர்கள் குழப்பம் அடைந்தனர்.
இதனிடையே, அதிமுகவில் ஒற்றைத்தலைமை என்பது தொண்டர்களின் கருத்து என சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார். மதுரையில், அதிமுக புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் கிளைக்கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அதிமுக என்றாலே ராணுவக்கட்டுப்பாடு என்றும் நேற்று கட்சி அலுவலகத்தில் ஆரோக்கியமான விவாதம்
நடைபெற்றுள்ளது என்றும் கூறினார். ஒற்றை தலைமை என்பது தொண்டர்களின் கருத்து என்ற அவர் பொதுக்குழு தீர்மானத்தையே பின்பற்றுவோம் என்றும் அதிமுக இயக்கத் தொண்டர்கள் கட்டுப்பாடோடு இருப்பார்கள் என்றும் தெரிவித்தார்.
அதிமுகவில் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு நீண்ட காலமாக ஒற்றை தலைமை விவகாரம் பேசப்பட்டு வருகிறது. ஒவ்வொரு முறை நிர்வாகிகள் கூட்டம் நடபெறும் போதெல்லாம் ஒற்றை தலைமை குறித்து சர்ச்சை எழுகிறது. பின்னர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொண்டர்களை சமரசப்படுத்தி கட்சியை நிலைநாட்டி கொண்டு செல்வதாக கூறப்படுகிறது. அதுபோல்தான் இந்த முறையும் ஒற்றை தலைமை விவகாரம் சூடுபிடித்துள்ளது. இதில் எந்த மாதிரியான முடிவுகள் எடுக்கப்படும் என வருகிற பொதுக்குழு கூட்டத்தில் தெரிந்து விடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
-இரா.நம்பிராஜன்








