தேசவிரோத சக்திகளை பஞ்சாப் அரசு பாதுகாக்கவில்லை: கெஜ்ரிவால்

தேசவிரோத சக்திகளை பஞ்சாப் அரசு பாதுகாக்கவில்லை என்று டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். பஞ்சாபில் ஆம் ஆத்மி தலைமையிலான அரசு அமைந்து 3 மாதங்களாகிறது. இந்நிலையில்,…

தேசவிரோத சக்திகளை பஞ்சாப் அரசு பாதுகாக்கவில்லை என்று டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

பஞ்சாபில் ஆம் ஆத்மி தலைமையிலான அரசு அமைந்து 3 மாதங்களாகிறது. இந்நிலையில், ஜலந்தரில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கான சொகுசு பேருந்து சேவையை முதலமைச்சர் பகவந்த் மான் முன்னிலையில், அர்விந்த் கேஜ்ரிவால் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் பேசிய அவர், பஞ்சாபில் தற்போது நேர்மையான அரசு இருப்பதாகக் குறிப்பிட்டார். இதற்கு முன் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு செய்திராத பல்வேறு சாதனைகளை ஆம் ஆத்மி அரசு செய்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

பஞ்சாபின் மான்சா அருகே, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் பிரபல பாடகருமான சித்து மூஸ்வாலா சுட்டுக்கொல்லப்பட்டது குறித்துப் பேசிய அர்விந்த் கெஜ்ரிவால், இந்த கொலையில் தொடர்புடைய ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் கொலை நிகழ்ந்த 24 மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முதலமைச்சர் பகவந்த் மான் தலைமையிலான அரசு முன்னுரிமை கொடுத்து வருவதாகத் தெரிவித்த அர்விந்த் கெஜ்ரிவால், இத்தகைய ரவுடிகளை உருவாக்கியது முந்தைய காங்கிரஸ் அரசுதான் என குற்றம் சாட்டினார்.

பஞ்சாப் அரசு ரவுடிகளையோ, தேச விரோத சக்திகளையோ ஒருபோதும் பாதுகாக்காது என்றும் அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.