ஹோண்டுராஸ் நாட்டு சிறையில் ஏற்பட்ட வன்முறையில் 41 பெண் கைதிகள் உயிரிழந்தனர்.
தலைநகர் டெகுசிகல்பாவில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் தாமரா நகரில் மகளிர் சிறைச்சாலை உள்ளது. இங்கு கைதிகளுக்கு இடையே வன்முறை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இரு குழுக்களாக பெண் கைதிகள் மோதிக்கொண்டதாகவும், கையில் கிடைத்தவற்றை எடுத்து ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நீண்ட நேரம் நடைபெற்ற மோதலில் சுமார் 41பேர் உயிரிழந்தனர்.
இதில் சிலர் சுட்டுக் கொல்லப்பட்டனர். சிலர் உயிருடன் எரிக்கப்பட்டனர்,. ஏழு பெண் கைதிகள் துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக் காயங்களுகளுடன் டெகுசிகல்பா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே கைதிகளின் உறவினர்கள் சிறைக்கு வெளியே திரண்டதால் அங்கு மேலும் பதற்றம் அதிகரித்தது. “எனது மகளுக்கு என்ன நடந்தது என தெரியவில்லை. எங்களுக்கு எந்த தகவலும் சிறை நிர்வாகம் இதுவரை தெரிவிக்கவில்லை என கைதியின் தாய் ஒருவர் தெரிவித்தார்.சிறைச்சாலைகளுக்குள் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க அதிகாரிகள் மேற்கொண்ட சமீபத்திய முயற்சிகளால் கலவரம் தொடங்கியதாக ஹோண்டுராஸ் சிறைச்சாலை அமைப்பின் தலைவரான ஜூலிசா வில்லனுவேவா கூறியுள்ளார். ஹோண்டுராஸ் நாட்டில் கடந்த 2019-ம் ஆண்டு கைதிகளுக்கு இடையே நடைபெற்ற மோதலில் 40 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.






